/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு
/
ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு
ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு
ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு
ADDED : மே 13, 2025 02:24 AM
ஓசூர் :ஓசூரில், இரு இடங்களில் மட்டும் சாலையோர கடைகளை அகற்றி விட்டு, ஒருதலைப்பட்சமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதால், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் சாலையோரங்களில் வியாபாரிகள் தள்ளுவண்டிகள் மற்றும் கடைகள் அமைத்து, பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாலையோர கடைகளை அகற்ற மாநகராட்சி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தாலுகா அலுவலக சாலையில், நேதாஜி ரோடு சந்திக்கும் பகுதியில், சாலையோரம் இருந்த கடைகள், காமராஜ் காலனி சாலையோரம் இருந்த கடைகளை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. மீண்டும் கடை வைக்காமல் இருக்க, கழிவு நீர் கால்வாயை உடைத்து, சாலையில் கடை வைக்க முடியாத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் கழிவுகளை கொட்டி வைத்துள்ளது.இதனால், அப்பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நடைமுறையில் நகர் முழுவதும் கடைகளை அகற்ற மாநகராட்சி முயற்சிக்கவில்லை. இந்த இரு இடங்களை மட்டும் குறி வைத்து, சில அரசியல் கட்சி தலைவர்களை திருப்திப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளதாக, வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓசூர் ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ சாலையில் சாலையோரம் அதிகளவில் கடைகளை அமைத்து வியாபாரம் நடக்கிறது. அதனால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
மேலும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் எதிரே மேம்பாலத்திற்கு அடியில் உள்ள கடைகள், பூ மார்க்கெட் முன் நடைபாதையில் உள்ள கடைகள், உழவர் சந்தை சாலையோரம் உள்ள கடைகள், பழைய பெங்களூரு சாலையோர கடைகள் என எதையும் அகற்றாமல், இரு இடங்களில் உள்ள கடைகளை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. இது சிலரை திருப்திப்படுத்த மேயர் சத்யா எடுத்த முடிவு என, வாழ்வாதாரத்தை இழந்துள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், நகரில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் முழுவதையும் அகற்றி, ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி, அப்பகுதியில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.