/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சின்னஏரிக்கரையில் மரக்கன்று நடல்
/
சின்னஏரிக்கரையில் மரக்கன்று நடல்
ADDED : ஏப் 28, 2025 07:44 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சின்ன ஏரிக்கரையில், உணர்வுகள் அமைப்பு சார்பில் கடந்த, 2023 ஏப்ரலில், 50 மரக்கன்றும், டிசம்பரில், 50 மரக்கன்றும், 2024 பிப்ரவரியில், 65 மரக்கன்றும் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று சின்னஏரிக்கரையில், இலுப்பை, செண்பகம், நாவல், புரசு, மாமல்லி, அத்தி, மகிளம் உள்ளிட்ட, 33 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின், உணர்வுகள்
அமைப்பினர் கூறியதாவது: எங்கள் அமைப்பிலுள்ள, 50 பேர் மூலம் சின்னஏரிக்கரையில், மொத்தம், 165 மரக்கன்றுகள் நட்டு, வாரம் மூன்று முறை டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றி, இரும்பு கூண்டு வைத்து பராமரித்து வருகிறோம். சின்னஏரிக்கரையில் வாகனங்களை நிறுத்துவோர், வளர்ந்து வரும் மரங்களை இடித்து விடுகின்றனர். இங்கு குப்பை கொட்டுவோர், அதற்கு தீ வைக்கும்போது, வளரும் மரக்கன்றுகளும் தீயில் கருகி விடுகிறது. எனவே இவற்றை தடுக்க, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே ஏரி நீரில் கலப்பதால், தண்ணீர் மாசடைகிறது. எங்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தால், கழிவுநீரை சுத்திகரித்து, சுத்தமான நீரை ஏரியில் விட்டுவிடுவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.