முன்விரோதத்தில் தகராறு வாலிபரை தாக்கிய இருவர் கைது
முன்விரோதத்தில் தகராறு வாலிபரை தாக்கிய இருவர் கைது
ADDED : நவ 12, 2026 01:53 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 21. ராயக்கோட்டை சாலையிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்தார். அங்கு சின்ன பெல்லாரம்பள்ளியை சேர்ந்த முருகன், 38, என்பவரும் பணிபுரிந்தார்.
கடந்த, 3 மாதங்களுக்கு முன் பன்னீர்செல்வத்திடம், ஒரு லட்சம் ரூபாய் கடனாக முருகன் கேட்டார். பணம் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முருகனை, கடை உரிமையாளர் பணியில் இருந்து நீக்கினார். இதனால், பன்னீர்செல்வம் மற்றும் முருகனுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் சூப்பர் மார்க்கெட் அருகே நின்றிருந்த பன்னீர்செல்வத்திடம், முருகன் மற்றும் அவருடன் வந்த, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த லட்சுமிபுரம் கண்ணன், 35, ஆகியோர் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். பன்னீர்செல்வம் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், அவரை தாக்கிய இருவரையும் கைது செய்தனர்.
