/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பழுது 3 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுப்பு
/
தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பழுது 3 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுப்பு
தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பழுது 3 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுப்பு
தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பழுது 3 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : ஜூன் 21, 2025 10:49 PM

ஓசூர்:ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால், அவ்வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 3 கி.மீ., தொலைவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதால், எப்போதும் போக்குவரத்து நிறைந்திருக்கும். இச்சாலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பாலத்தில் நேற்று மதியம், 12:30 மணிக்கு பழுது ஏற்பட்டது.
பில்லருக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை, இரும்பு தகடுகள் மற்றும் ரோப் அமைத்து இணைத்திருப்பர். இந்த பகுதியை 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' என்பர். வாகனங்கள் செல்லும்போது பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த ஜாயின்ட் கீழ் பகுதியில், 'ஸ்பிரிங்' அமைக்கப்பட்டிருக்கும்.
நேற்று மதியம் பாலத்தின் மைய பகுதியில், ஒரு இடத்தில் ரோப் துண்டாகி, ஸ்பிரிங் பழுதானது.
பாலம் பில்லரில் இருந்து விலகி, முக்கால் அடி அளவிற்கு வெளியே வந்தது. இதனால் ஆபத்தை தவிர்க்க, பெங்களூரு செல்லும் வாகனங்கள் அனைத்தும், அருகே சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. அதனால், ஓசூர் நகரில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பத்தலப்பள்ளியில் இருந்து ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஓசூர் சீத்தாராம்மேட்டிலிருந்து, இ.எஸ்.ஐ., செல்லும், இன்னர் ரிங்ரோட்டில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
ஓசூர் நகரில், ஏற்கனவே பாகலுார் சாலை பணியால், கடும் போக்குவரத்து நெரிசலோடு, தேசிய நெடுஞ்சாலையின், நான்கு இடங்களில் உயர்மட்ட மேம்பால பணிகளால், அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கிறது.
இந்நிலையில், மேம்பாலத்தின் ரோப் அறுந்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.
பால பழுதை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை முடிக்க பல நாட்களாகும் என்பதால், ஓசூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட் பகுதியை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைக்க வேண்டும். இந்த மேம்பாலம், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள நிலையில், பராமரிப்பில்லாததால், தற்போது பழுதடைந்துள்ளது.