/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணியை, மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரயு துவக்கி வைத்தார்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி துவங்கியது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலிருந்தும் அந்தந்த பகுதிகளிலுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், மொத்தம், 1,888 ஓட்டுசாவடிகள் உள்ளன; இதில், 208 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 16,23,179 பேர். இதில் அங்கீகரிக்கப்பட்ட, 4 கட்சி வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்படாத, 8 கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள், 15 பேர் உள்பட, 27 பேர் போட்டியிடுகின்றனர். கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்திலிருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாகனங்கள் மூலம், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், 4,526 ஓட்டுப்பதிவு இயந்திரம், 2,251 கன்ட்ரோல் யூனிட், 2,392 விவி பேட் உள்பட மொத்தம், 9,169 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டுச்சாவடி மையங்களில், 3 மாநில போலீசார், துணை ராணுவ படையினர் உள்பட, 3,772 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மண்டல அலுவலர், ஓர் உதவி அலுவலர், ஓர் அலுவலக உதவியாளர் என 3 நபர்களுடன், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போலீசாருடன் வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாகனத்துடன் ஓட்டுப்பதிவுக்கு தேவையான எழுது பொருள்கள், படிவங்கள், சாக்கு பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, கூடுதலாக ஒரு வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 29,224 பேரில் 2,137 பேர், தபால் ஓட்டை பதிவு செய்து உள்ளனர். இன்று நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அனைவரும் ஓட்டளித்து, 100 சதவீத ஓட்டுப்பதிவை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள். ஆர்.டி.ஓ., பாபு, மற்றும் தேர்தல் அலுவலர்கள் போலீசார் உடனிருந்தனர்.

