/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
199 பூங்காக்களை மேம்படுத்த செயல் திட்டம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
199 பூங்காக்களை மேம்படுத்த செயல் திட்டம் உயர்நீதிமன்றம் உத்தரவு
199 பூங்காக்களை மேம்படுத்த செயல் திட்டம் உயர்நீதிமன்றம் உத்தரவு
199 பூங்காக்களை மேம்படுத்த செயல் திட்டம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 01, 2024 04:58 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள 199 பூங்காக்களை மேம்படுத்த செயல் திட்டம், அதற்கு தேவையான நிதி ஆதாரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் பொழிலன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை கே.கே.நகரில் ஏ.ஆர்.,நினைவு சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. விழாக்கள் நடத்துகின்றனர். சமையல் செய்கின்றனர். அனுமதியின்றி ஒலி பெருக்கி பயன்படுத்துகின்றனர். அருகில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் குவிக்கப்படுகின்றன. சிறுவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவை மேம்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதிகள் அமர்வு: அனுமதியற்ற, தேவையற்ற கட்டுமானங்களை அகற்ற வேண்டும். பூங்காவை பழைய நிலைக்கு கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏ.ஆர்.,பூங்காவை காலை 6:00 முதல் 9:00 மணிவரை, மாலை 4:30 முதல் இரவு 8:30 மணிவரை மட்டும் திறந்து வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் 199 பூங்காக்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டுவர 2022 ல் இந்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. அதன்படி எத்தகைய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு:
அறிக்கையின்படி 199 பூங்காக்களில் 54 மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன. 145 பூங்காக்களை மேம்படுத்த நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்றம் 2022 ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை. பூங்காக்களை மேலும் மேம்படுத்துவதற்கான செயல்திட்டம், அதற்கு தேவையான நிதி திட்ட மதிப்பீடு, பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் நிதி ஆதாரத்தை தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், நிறுவனங்களிடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி மாநகராட்சி பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் விவாதித்து கமிஷனர் ஆக.,28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏ.ஆர்.,பூங்காவில் கழிவுகளை அகற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் பூங்காவை பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை இல்லை. மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் செயல், பாராட்டும் வகையில் இல்லை. கழிவுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.