ADDED : ஜூலை 03, 2024 06:06 AM

மேலுார் : மேலுார் அரசு இருபாலர் பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேலுாரில் 13 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு இருபாலர் பள்ளி 1931 முதல் செயல்படுகிறது. இங்கு 450 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல பகுதிகளில் சேதமடைந்தும் உள்ளது. குடிநீர் உப்பு நிறைந்துள்ளது என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது : பள்ளியின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குறித்து உள்ளே செல்பவர்கள் வளாகம், விளையாட்டு மைதானத்தில் மது அருந்துகின்றனர். போதை தலைகேறிய நிலையில் பாட்டில்களை உடைக்கின்றனர். சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் அதிக உவர்ப்பாக இருப்பதால் மாணவர்கள் குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர். பள்ளிக்கு இரவு நேர காவலாளியை நியமித்து அங்கு நடைபெறும் சமூக விரோத செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றனர்.
தலைமையாசிரியர் முனியாண்டி கூறுகையில், இரவு நேரத்தில் போலீசார் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். காவலாளி பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன் என்றார்.