/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் அண்ணாநகர்
/
அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் அண்ணாநகர்
ADDED : மார் 03, 2025 05:10 AM

மதுரை : மேடு பள்ளமான ரோடுகள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை, தெருநாய்கள் தொல்லை, கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை என பல இன்னல்களுடன் வாழ்கின்றனர் அண்ணாநகர் மக்கள்.மதுரை 34வது வார்டில் அண்ணாநகர் 1 - 6 குறுக்குத்தெருக்கள், சர்வேஸ்வரன் கோயில் தெருக்கள், எஸ்.எம்.பி., காலனி, ஜீவா தெருஉள்பட பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரையின் பிற பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளில் பல நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இங்கு கிடையாது.
சுத்தம் என்பதே இல்லை
முத்துராமலிங்க தெரு இந்திரா: தெரு முழுக்க ஆங்காங்கே குப்பை சிதறிக் கிடக்கிறது. பகுதி முழுவதும் துாய்மை செய்யாமல் சில பகுதியில் மட்டும் பெயரளவில் சுத்தம் செய்கின்றனர்.இதுபற்றி கேட்டால் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது என்கின்றனர்.
மொத்தமுள்ள 25 பணியாளர்களில் 15பேர் மட்டுமே வருகின்றனர். காற்று மாசுபாடால் சுகாதாரம் சீர்கேடு ஆகிறது. தெரு நாய்களால் வெளியில் செல்ல மக்கள் தயங்குகின்றனர். ரோடுகள் மேடு பள்ளமாக உள்ளன. மழைநீர் வடிகால் 2 ஆண்டுகளாக பராமரிப்பில்லை. முறையாக சுத்தம் செய்தால் நீரை சேமிக்கலாம்.
அடிப்படை வசதி வேண்டும்
எஸ்.எம்.பி., காலனி சீனிவாசன்: இங்கு ரோடுகள் சீராக இல்லை. ரோடு முழுவதும் ஜல்லிக்கற்களாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். பாதாளச் சாக்கடையும் இல்லை. கழிநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நோய்த்தொற்று அபாயம் உள்ளது.
பாதாள சாக்கடைக்கு அளவீடு செய்துள்ளனர். அதனை விரைவுபடுத்தி அமைக்க வேண்டும். குடிநீர் வசதி கொஞ்சமும் இல்லை. முல்லை பெரியாறு திட்டம் முழுமை பெறாமல் இருக்கிறது. நிறைய மாணவர்கள் தொலைவில் செல்வதால், இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆலமரம் பகுதியில் பஸ் ஸ்டாப் வேண்டும்.
தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்
கவுன்சிலர் (தி.மு.க.,) பாண்டீஸ்வரி: மொத்தமுள்ள 60 தெருக்களில் புதிய ரோடுகளை சமீபத்தில் அமைத்துள்ளோம். முல்லைப் பெரியாறு திட்டம் முடிந்ததும் மற்ற ரோடுகளை அமைப்போம். பாதாளச் சாக்கடை திட்டத்தில் தமிழகம் முழுமைக்கும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
முன்பிருந்த மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல திட்டம் இருந்தது. தற்போது அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடாகிறது. தெருக்களின் அளவைப் பொறுத்து புதிய திட்டம் தொடங்க வேண்டும். ரூ. 4லட்சம் செலவில் ரேஷன் கடை திறந்துள்ளோம். எஸ்.எம்.பி., காலனி அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலை பள்ளியாக உயர்த்த கேட்டுள்ளோம். இப்பகுதி பூங்கா கட்டுகிறோம்.இங்கு 15 போர்வெல்களை அமைத்துள்ளோம். தெருநாய்களுக்கு தீர்வு இன்றி தவிக்கிறோம் என்றார்.