ADDED : மார் 03, 2025 05:09 AM

பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே காரைக்கேணியில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை படுகளத் திருவிழா நடைபெறும். இங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு 'தென்னந்தோப்பு' நாட்டைச் சேர்ந்த குணசீலன் என்பவரும், கவச கோட்டை நாட்டை சத்தியவேந்தன் என்பவரும் ஆண்டனர்.
குறுநில மன்னர்களான இருவருக்கும் போர் நடைபெறும். குணசீலன் வேட்டைக்குச் சென்றபோது வல்லத்தான் குருவியை விரட்டிச் சென்று வில்லால் அடித்ததில் அடிபட்ட குருவி கவசகோட்டை நாட்டுக்குள் விழுந்தது. இந்த குருவியை குணசீலன் எடுக்கச் சென்றபோது கவசகோட்டை மன்னர் தடுத்தார்.
குருவிக்காக காரைக்கேணி நாட்டு அரசர் அரசுதேவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. இதில் மன்னர்கள் 2 பேரும் நேருக்கு நேர் போரிட வேண்டும். யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த குருவி அவருக்கே சொந்தம் என்று பஞ்சாயத்து பேசப்பட்டது.
குணசீலன் தனது ராணியிடம் சண்டைக்கு செல்வதாக கூறிவிட்டு, புறப்படும் முன்பு ஒரு ஆட்டை கத்தியால் குத்தி குடலை உருவி அதை ஆட்டின் கொம்பிடையே கட்டினார். சேவலை துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலை உருவினார்.
ஆடும் சேவலும் உயிருடன் இருந்தால்தான் நான் போரில் வென்று திரும்புவேன். இறந்துவிட்டால் நானும் இறந்து விட்டதாக கருதிக்கொள் என்று ராணியிடம் கூறிவிட்டு சண்டைக்கு சென்றார். ஆனால் சண்டையில் மன்னர் கொல்லப்பட்டார். மன்னர் வாரிசுகளில் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஒரு குதிரைவீரரும் எஞ்சிய மன்னரின் வாரிசும் தப்பி விடுகின்றனர்.
வீட்டில் ஆடும் சேவலம் இறந்து விடுகின்றன. இதனை நினைவூட்டும் விதமாக காரைக்கேணி மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் படுகளத் திருவிழாவை நடத்துகின்றனர். தப்பிப் பிழைத்த குதிரை வீரரின் வாரிசுகள்தான் இந்த விழாவை நடத்துகின்றனர். இந்த விழா நேற்று தொடங்கியது. இதில் சிலம்பாட்டம், தேரோட்டம், பாலகுருநாதசாமி குதிரை வலம் வருதல் நடந்தது. பல குழுவினர்களாகப் பிரிந்து போரிட்டுக் கொண்டனர்.