/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மும்மொழிக் கொள்கையால் அரசு பிற மாநிலங்களில் தமிழை வளர்க்கலாம் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன் யோசனை
/
மும்மொழிக் கொள்கையால் அரசு பிற மாநிலங்களில் தமிழை வளர்க்கலாம் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன் யோசனை
மும்மொழிக் கொள்கையால் அரசு பிற மாநிலங்களில் தமிழை வளர்க்கலாம் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன் யோசனை
மும்மொழிக் கொள்கையால் அரசு பிற மாநிலங்களில் தமிழை வளர்க்கலாம் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன் யோசனை
ADDED : மார் 07, 2025 06:52 AM
மதுரை : ''மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பிறமாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழை வளர்க்கும் வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்
மதுரையில் அவர் கூறியதாவது: ஐநுாறு பக்க தேசிய கல்விக் கொள்கையில் 3 பக்கங்களில்தான் மொழி பற்றி உள்ளது. மீதி பக்கங்களில் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களின் திறன்கள், உயர்கல்வியில் ஆராய்ச்சி, பட்டியல், பழங்குடி சமுதாய பெண்களின் கல்வி, மாணவர் இடைநிற்றல் உட்பட விவரங்கள் உள்ளன. இதில் ஹிந்தியை திணிப்பதாக தி.மு.க.,வினர் பொய் கூறுகின்றனர்.
மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்க வேண்டும் என்பது காங்கிரஸின் கொள்கை. ஆனால் ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்ற மோடி தேசத்துரோகியா. தமிழகத்தில் பா.ஜ., முதல்வர் இருந்தால் உ.பி., ம.பி., மகாராஷ்டிராவிலும் மூன்றாவது மொழியாக தமிழை படியுங்கள் என்று சொல்வோம். தமிழக அரசு அதுபோல வாய்ப்பை பயன்படுத்தி தமிழை வளர்க்க வேண்டியதுதானே. அதனால் நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வாய்ப்புள்ள இடங்களில் தமிழை மூன்றாவது மொழியாக படிக்க வையுங்கள் என கடிதம் எழுதியுள்ளேன்.
கல்வி, பொதுப் பட்டியலில் இருக்கிறது. வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சி என 15 ஆண்டுகள் மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்தது. அப்போது ஏன் தி.மு.க., இதுபற்றி கேட்கவில்லை. கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றது காங்கிரஸ். அதனை ஒத்துக் கொண்டது தி.மு.க., அதற்கு ஒத்து ஊதியது மார்க்சிஸ்ட் கட்சி.
கல்வி பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கை. மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பது தி.மு.க.,வின் கொள்கை. எங்கள் கொள்கைப்படி இருப்பதால் மாநில பட்டியலுக்கு கொண்டுவரவில்லை. சென்னையில் தமிழிசையை கைது செய்துள்ளனர். அவர் கைது நடவடிக்கைக்கு பயந்தவர் அல்ல.
மும்மொழி கொள்கையுள்ள குஜராத், கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் தமிழகத்தைப் போல பல மடங்கு உச்சத்தில் உள்ளது. உ.பி., பீஹாரில் பின்தங்கி இருக்க தொடர்ந்து அங்கு காங்கிரஸ் அரசு இருந்ததே காரணம்.
தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மீதியுள்ளவற்றை நிறைவேற்றப் போவதில்லை. அதனை மறைக்க திசை திருப்பும் உத்திகளை மேற்கொள்கின்றனர். த.வெ.க., தலைவர் விஜய் எந்தப் பிரச்னையிலும் திடமான முடிவை மேற்கொள்வதில்லை. அவருக்கு வளர்ச்சி, மொழி பிரச்னைகள் பற்றி எதுவும் தெரியாது. சினிமா ஷூட்டிங்கில் சண்டை, பாடல் காட்சிகளில் தோன்றுவது போல வந்து சென்றுவிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.