குன்றத்தில் அடிப்படை வசதி இல்லாத கார் பார்க்கிங்குகள்
குன்றத்தில் அடிப்படை வசதி இல்லாத கார் பார்க்கிங்குகள்
ADDED : ஆக 07, 2026 06:42 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் உள்ள 2 வாகன நிறுத்துமிடங்களிலும் அடிப்படை வசதிகளின்றி டிரைவர்கள், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் தங்கள் டூவீலர்களை நிறுத்த வசதியான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் ரத வீதிகள், பெரிய ரத வீதி, அரசு பஸ்கள் சென்று திரும்பும் ஜி.எஸ்.டி., ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன.
தெப்பக்குளம் கரைப்பகுதி, சரவணப் பொய்கை செல்லும் வழியில் கார்கள் நிறுத்த காப்பகம் உள்ளது. இவ்விரண்டு வாகன காப்பகங்களும் கோயில் சார்பில் டெண்டர் விடப்பட்டு, கார்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தெப்பக்குளம் காப்பகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. டிரைவர்கள் அமர இருக்கை, மேற்கூரை வசதி இல்லை. வெயில், மழைக்கு டிரைவர்கள் காருக்குள் பதுங்கும் நிலை உள்ளது. சரவண பொய்கை காப்பகத்தில் தண்ணீர் வசதி இல்லாத கழிப்பறை பூட்டிக் கிடக்கிறது. அங்கும் டிரைவர்கள் அமர மேற்கூரை வசதி இல்லை.
இரண்டு வாகன காப்பகங்களிலும் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, குறிப்பிட்ட இடத்தில் டிரைவர்கள் அமர மேற்கூரை வசதியும் செய்து தரவேண்டும்.
