/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே... தேரோட்டத்தில் வெளிநாட்டவர் நெகிழ்ச்சி
/
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே... தேரோட்டத்தில் வெளிநாட்டவர் நெகிழ்ச்சி
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே... தேரோட்டத்தில் வெளிநாட்டவர் நெகிழ்ச்சி
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே... தேரோட்டத்தில் வெளிநாட்டவர் நெகிழ்ச்சி
ADDED : ஏப் 23, 2024 06:54 AM

மதுரை : சித்திரைத் திருவிழா உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் கலாசாரத் திருவிழா. இவ்விழாவின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் இங்கு தங்கியிருந்து பங்கேற்பர். இப்போது வெளிநாட்டினரும் இவ்விழாவில் பங்கேற்றாக வேண்டும் என ஆர்வம் காட்டி தமிழகம் வருகின்றனர். அப்படி வந்த சிலர் மதுரை பற்றியும், சித்திரைத் திருவிழா அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
வண்ணமயமான மதுரை
மதுரை என்றால் எனது நினைவுக்கு வருவது பலவகை வண்ணங்கள் தான். என் கார் டிரைவர் சித்திரைத் திருவிழாவைப் பற்றி சொன்னதும் உடனே பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதனால் இன்று எனது பயண அட்டவணைப்படி மூணாறு செல்வதை ஒத்தி வைத்து தேரோட்டம் காண முடிவு செய்தேன். பிரமாண்டமான தேர்... கடல் அலையாய் மனித தலைகள்... அதில் வண்ண வண்ண ஆடைகளுடன் மக்கள், அலங்கரிக்கப்பட்ட பூக்கள் எல்லாமே என்னை கவர்ந்து விட்டன.
-- பிரெட்ரிக், பிரான்ஸ்
பெருமையாக இருக்கிறது
இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல்முறை. பலவித கலாசாரம், பண்பாட்டை பார்க்க ஆவலாக இருந்தது. வட மாநிலங்களில் கூட இப்படி ஒரு பிரம்மாண்டமான திருவிழாவை நான் பார்த்ததில்லை. ஆனால் தமிழ் மக்கள் எங்களை மரியாதையுடன் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. தேர் வரும்போது அவர்களின் ஆரவாரம் என்னையும் ஆர்ப்பரிக்க வைத்தது. கோயில் முன் யானையிடம் ஆசி பெற்றது என் அதிர்ஷ்டம்.
கடவுள் மீனாட்சியை பார்க்கும் போது நிஜமாகவே, இந்நாட்டு ராணி அருளாசி தருவது போலவே இருந்தது. கண்டிப்பாக அடுத்த முறை எனது நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து வருவேன்.
-- நிகோல் ஹாவர்டு, அமெரிக்கா
கம்பீரத்தின் அடையாளம்
உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். மீனாட்சி அம்மன் கோயிலைப் போன்ற பிரமாண்டமான ஒன்றை நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டு மக்கள் என்னை நன்கு உபசரித்து, அன்புடன் பழகுகின்றனர். கோயிலை பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருவதால் குறிப்பிட்ட இடங்களுக்கு மேல் எங்களை அனுமதிக்கவில்லை. கூட்ட நெரிசலால் சற்று சிரமமாக இருந்தாலும் இத்தனை பெரிய கலாசார விழாவில் பங்கேற்றதால் அது சிரமமாக தெரியவில்லை.
-- ஷாஷ், ஆஸ்திரேலியா.

