/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோலாகலமாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: ஆர்ப்பரித்த மாணவர்கள்
/
கோலாகலமாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: ஆர்ப்பரித்த மாணவர்கள்
கோலாகலமாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: ஆர்ப்பரித்த மாணவர்கள்
கோலாகலமாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: ஆர்ப்பரித்த மாணவர்கள்
UPDATED : மார் 24, 2024 12:16 PM
ADDED : மார் 24, 2024 06:16 AM

மதுரை : தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்யும் வகையில் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக நேற்று துவங்கியது.
ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வு முடிந்த பின் நடத்தப்படும் தினமலர் வழிகாட்டியை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள் முதல் நாள் நிகழ்ச்சியில் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.
முதல்நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் சோபியா, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முதல்வர் அலமேலு, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், மாணவர்கள் அனிருத், ஜனனி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளை கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி செயலாளர் தீபன் தங்கவேல், கற்பகம் பல்கலை டீன் அமுதா, நாகர்கோவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் முதல்வர் கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஒரே இடத்தில் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை
கல்வி நிறுவனங்களின் கண்காட்சி காலை 10:00 மணி முதல் இடைவேளையின்றி மாலை 6:30 மணி வரை நடந்தன. இதில் மாணவர், பெற்றோர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 117 நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு பெற்றோர் தெரிந்து கொண்டனர். மேலும் கல்லுாரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், முந்தைய மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்புகள், கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பெற்றோர் ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டனர். விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரை ஒரே கூரையின் கீழ் இருந்ததால் தேவையான ஆலோசனைகளை பெற்றோர் எளிதில் தெரிந்துகொண்டு எந்த கல்லுாரியில் சேர்க்கலாம் என்ற முடிவை மேற்கொண்டனர். இதன் மூலம் கல்லுாரிகளை தேடிச் சென்று அலைய வேண்டிய வேலை தவிர்க்கப்பட்டது என பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிகழ்ச்சியில் 'பவர்டு பை' பங்களிப்பாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம் செயல்படுகின்றன. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.ஹெச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.

