/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குண்டாஸ் கைது உத்தரவிற்கு எதிராக மனு நிராகரிப்பு: தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
குண்டாஸ் கைது உத்தரவிற்கு எதிராக மனு நிராகரிப்பு: தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
குண்டாஸ் கைது உத்தரவிற்கு எதிராக மனு நிராகரிப்பு: தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
குண்டாஸ் கைது உத்தரவிற்கு எதிராக மனு நிராகரிப்பு: தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 01, 2024 04:18 AM
மதுரை: குண்டர் சட்ட கைது உத்தரவிற்கு எதிராக மறு ஆய்வு செய்யக்கோரும் மனுக்களை பரிசீலித்து நிராகரிக்கும் உத்தரவுகளை அனுப்புவதில் தாமதத்தை தவிர்க்க அதே நாளில் சிறைகளுக்கு இ-மெயிலில் கடிதம் அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிப்.,28ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கைது உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மனுதாரர் அனுப்பியமனு ஏப்.2ல் தமிழக அரசிற்கு சென்றது. அரசின் நிராகரித்த உத்தரவு மனுதாரருக்கு ஏப்.22 ல் அனுப்பப்பட்டது. மனுவை பரிசீலிப்பதில் 7 நாட்கள் தாமதம் உள்ளது. இதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.
அரசு தரப்பு வழக்கறிஞர்: கைது உத்தரவில் சட்டவிரோதம் இல்லை. மறு ஆய்வு மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அது மனுதாரரின் உரிமைகளுக்கு எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: மனுவை விரைவாக தவிர்க்க முடியாத தாமதமின்றி பரிசீலிக்க வேண்டும் என்பது சட்டம்.பைசல் செய்வதில் தாமத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்தாதது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். தாமதத்திற்கு ஏற்புடைய விளக்கம் எதுவும் இல்லை. மனுதாரர் மீதான கைது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அரசு மனுதாரரின் ஆவணத்தை ஏப்.,12ல் ஆய்வு செய்தது.நிராகரிப்பு கடிதம் ஏப்., 15ல் தயாரிக்கப்பட்டுள்ளது.அது மனுதாரருக்கு ஏப்., 22 ல் சிறை அதிகாரிகளால் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. நிராகரிப்புக் கடிதம் தயாரிப்பு தேதிக்கும், மனுதாரரிடம் அது சென்றடையும் தேதிக்கும் இடையே உள்ள தாமதத்தை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம். நாங்கள் கையாண்ட பெரும்பாலான வழக்குகளில், தாமதத்திற்கான காரணம் எதுவும் இல்லை. இது மன்னிக்க முடியாதது.
நிராகரிப்புக் கடிதம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பதிவுதபாலில் மட்டுமே அனுப்பப்படுகிறது. அதன்பிறகு மனுதாரருக்கு வழங்கப்பட்டது. இது தாமதத்தை ஏற்படுத்துகிறது.
வரும் காலங்களில் நிராகரிப்பு கடிதம் தயாரிக்கப்பட்ட பின் அதன் 'ஸ்கேன்' செய்யப்பட்ட நகலை சம்பந்தப்பட்ட சிறைக்கு இ-மெயிலில் அதேநாளில்அனுப்ப வேண்டும். கடிதம் அனுப்பியது குறித்து சிறை கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும்.
கடிதத்தின் நகல் கிடைத்ததும், அதே நாளில் சிறை கண்காணிப்பாளர், அதை உண்மை நகல் எனசான்றளிக்க வேண்டும். அன்றைய தினமே நகலை கைதிக்கு வழங்கி, அதற்கான ஒப்புதலை பெற வேண்டும். அதன் பிறகு நிராகரிப்பு கடிதத்தின் அசல் நகலை பதிவுத் தபால் மூலம் அனுப்பலாம். இதை குண்டர் சட்ட கைது தொடர்பான அனைத்து வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.