/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் பாலின மாற்று சிகிச்சை உண்டு
/
மதுரை அரசு மருத்துவமனையில் பாலின மாற்று சிகிச்சை உண்டு
மதுரை அரசு மருத்துவமனையில் பாலின மாற்று சிகிச்சை உண்டு
மதுரை அரசு மருத்துவமனையில் பாலின மாற்று சிகிச்சை உண்டு
ADDED : பிப் 24, 2025 03:41 AM
மதுரை : ''ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்புவோருக்கான அனைத்து சிகிச்சை வசதிகளும், மதுரை அரசு மருத்துவமனையிலேயே உள்ளதால் தென்மாவட்டத்தினர் வேறு நகரங்களுக்கு அலைந்து திரிய வேண்டாம்'' என டீன் அருள் சுந்தரேஷ்குமார், பிளாஸ்டிக் சர்ஜரி துறைத்தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
மதுரை அரசு மருத்துவமனையில் 2021 முதல் பாலினம் மாறுவோருக்கான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 2024 வரை ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 60 பேருக்கு புதிதாக செயற்கை மார்பகம் பொருத்தியுள்ளோம். 4 பேருக்கு ஆணுறுப்பு அகற்றப்பட்டு பெண்ணுறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 மணி நேரம் நீடிக்கும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை முறையாக செய்யாவிட்டால் சிறுநீரகப்பாதையில் பிரச்னை ஏற்படலாம். இது வாழ்நாள் முழுவதும் பாதிப்பாக அமைந்துவிடும். இங்கு பாலினம் மாறுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வியாழன் தோறும் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை தனியாக புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் மனநல ஆலோசகர், மகப்பேறு நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசனை வழங்குவதால் வெவ்வேறு இடங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. தேவையான பரிசோதனைகளுக்கு பின் தாமதமின்றி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
பெண்ணாக இருந்து ஆணாக மாறுவோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 152 பேருக்கு மார்பகம், 10 பேருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.
முதல்வரின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் இந்த அறுவை சிகிச்சைகள் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுவதால் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.

