/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுங்குளம் கண்மாயில் பனைமரமே பாதையாம் விதை, உரம் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
/
நெடுங்குளம் கண்மாயில் பனைமரமே பாதையாம் விதை, உரம் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
நெடுங்குளம் கண்மாயில் பனைமரமே பாதையாம் விதை, உரம் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
நெடுங்குளம் கண்மாயில் பனைமரமே பாதையாம் விதை, உரம் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூலை 25, 2024 04:46 AM

மதுரை: சோழவந்தான் நெடுங்குளம் பெரிய கண்மாயை தாண்டி செல்ல பாலம் இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் பனைமர கட்டைகளை கண்மாய் குறுக்கே இட்டு பாதையாக பயன்படுத்துகின்றனர்.
கண்மாயை ஒட்டியுள்ள நெல் உலர்த்தும் களம் சேதமடைந்து புதர் மண்டி உள்ளது. நடுப்பகுதியில் மட்டும் கொஞ்சம் சமதளமாக உள்ளதால் குடி பிரியர்கள் இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். தினமும் காலையில் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. நெடுங்குளம் பெரிய கண்மாயை தாண்டி வயல்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அவர்கள் கூறியதாவது:
3 கி.மீ., சுற்றி வர வேண்டும்
முத்து பிரியா: நெடுங்குளம் பெரிய கண்மாய் அருகே 7 ஏக்கரில் தென்னை, எலுமிச்சை பயிரிட்டுள்ளேன். ஆண்டில் 9 மாதங்கள் கண்மாயில் தண்ணீர் இருக்கும். கண்மாயில் ஓரடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தால் கண்மாய்க்குள் இறங்கி தேங்காய், எலுமிச்சை பறித்து வருகிறோம். தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும் மாதங்களில் 3 கி.மீ., ரோடு சுற்றி நடந்து தான் விளைபொருட்கள் உரம், பிற பொருட்களையும் கொண்டு வருகிறோம். இந்த பகுதியில் 100 ஏக்கரில் விவசாயமும் 200க்கும் மேற்பட்டோரும் கண்மாயை பாதையாக பயன்படுத்துகின்றனர். கலுங்கு பகுதியில் இருந்து குறுக்காக சிறிய பாலம் அமைத்தால் சிரமமின்றி கடந்து செல்ல முடியும்.
கண்மாய்க்குள் விழ வேண்டியதுதான்
தெய்வேந்திரன்: நெடுங்குளம் பெரிய கண்மாய் பாசனத்தில் 140 ஏக்கரில் பாசனம் நடக்கிறது. கண்மாயைத் தாண்டி தான் இங்குள்ளோர் வயலுக்கு செல்ல வேண்டும். சாதாரண நாட்களில் கண்மாயின் குறுக்கே மூன்று பனைமர கட்டைகளை குறுக்காக கிடத்தி வயலுக்கு செல்கிறோம். நடக்கும் போது பனைமர கட்டைகளில் கால் இடறினால் கண்மாய்க்குள் விழ வேண்டியது தான். மழைக்காலங்களில் இதை நம்பி செல்வது அபாயம் என்பதால் 3 கி.மீ., துாரம் சுற்றி வருகிறோம். அறுவடைக்கு டிராக்டர் வாடகைக்கு எடுத்தாலும் 3 கி.மீ., சுற்றி வருவதற்கு கூடுதல் கட்டணம் கேட்கின்றனர். கண்மாயின் குறுக்காக டிராக்டர் செல்லும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

