/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேரு ஓடும் வீதியில் சேறு ஓடுது: பக்தர்கள் வேதனை
/
தேரு ஓடும் வீதியில் சேறு ஓடுது: பக்தர்கள் வேதனை
ADDED : மே 22, 2024 01:30 AM

மேலுார் : திருவாதவூரில் சுவாமி எழுந்தருளிய தேர், சகதியில் சிக்கியதால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.
இவ்வூரில் உள்ள திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோயில் 2,300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலில் சித்திரை, வைகாசி உள்ளிட்ட 8 மாதங்கள் நடைபெறும் திருவிழாவின் போது சுவாமி தேரில் எழுந்தருளி கோயிலை சுற்றி 4 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இதில் கோயிலை தேர் சுற்றி வரும் தார் ரோடு குறுகலாகவும், சேறும் சகதியும் நிறைந்தும் இருந்ததால் பல இடங்களில் பள்ளத்தில் பதிந்தது. பக்தர்கள் தேரை இழுக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதன் சக்கரத்தை இரும்பு உபகரணங்களை கொண்டு உயர்த்தியும், இரும்புத் தகடுகளை தரையில் பதித்தும் தேரை இழுத்தனர்.
வழக்கமாக 30 நிமிடத்தில் சுற்றி வரும் தேர் நேற்று நிலைக்கு வர இரண்டரை மணி நேரத்திற்கும் மேலானது. சுவாமியுடன் தேர் ரோட்டில் நின்றதால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.
கோயிலை சுற்றி சிமென்ட் ரோடு அல்லது மண் தரையை அகற்றிவிட்டு தரமான முறையில் தார் ரோடு அமைக்க வேண்டும். தேர் தங்கு தடையின்றி ஓடுவதற்கு அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.

