/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தியாகம் செய்யாமல் யாரும் நன்மையடைய முடியாது
/
தியாகம் செய்யாமல் யாரும் நன்மையடைய முடியாது
ADDED : மார் 30, 2024 04:56 AM

மதுரை : ''தியாகம் செய்யாமல் யாரும் நன்மையை அடைய முடியாது'' என எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மஹா பெரியவரின் அனுஷ உற்ஸவம் மதுரை எஸ்.எஸ்.,காலனி எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மஹா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியதாவது:
ஜபம் செய்யும் போது நம் மனம் தீய எண்ணங்களை பற்றி சிந்திக்காது. பிரம்ம முகூர்த்தமாகிய காலை ஜபத்திற்கு சக்தி அதிகம் உண்டு.
காஞ்சி மஹா பெரியவர் 87 வருடம் தவ வாழ்க்கை மேற்கொண்டவர். யாருக்கு எதை சொல்ல வேண்டும் என்பதை தன் தவ வலிமையால் நிறைவேற்றியவர். மடாதிபதிகளுக்கு உரிய இலக்கணத்தை மீறாமல் வாழ்ந்தார்.
வேதம், இதிகாசம், புராணங்களில் கற்றதை மக்களுக்கு சொல்லி நல்வாழ்க்கை வாழச் செய்தவர். சித்தர்கள் இயற்கையோடு கலந்து வாழ்கிறவர்கள். அகஸ்தியர் ஏராள ஓலைச்சுவடிகளில் சித்த மருத்துவம் பற்றி எழுதியுள்ளார். தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் என்ற கருத்தால் இன்று காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் உள்ளது. தியாகம் இருந்தால் தான் எதுவும் சாத்தியப்படும்.
தாமிரபரணி நதிதான் தமிழகத்தில் தொடங்கி இங்கே கடலில் கலக்கிறது. இது ஜீவ நதி இதற்கு தாமிர சத்தை தருகின்ற ஆற்றல் உண்டு. பரணி வருணி என்றும் சொல்வது உண்டு.
மந்திரத்தில் தலையானது காயத்ரி மந்திரம். பெண்கள் ஜபிக்க கூடாது. குரு மூலம் தான் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்கிறார் மஹா பெரியவர்.
இவ்வாறு பேசினார்.
அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்தார். இன்று (மார்ச் 30) மஹா பெரியவர் விக்ரஹம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

