/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழநி கிரி வீதி பக்தர்களுக்கானது; வியாபாரிகளுக்கானதல்ல உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
/
பழநி கிரி வீதி பக்தர்களுக்கானது; வியாபாரிகளுக்கானதல்ல உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
பழநி கிரி வீதி பக்தர்களுக்கானது; வியாபாரிகளுக்கானதல்ல உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
பழநி கிரி வீதி பக்தர்களுக்கானது; வியாபாரிகளுக்கானதல்ல உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 05:06 AM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதி பக்தர்களுக்கானது; வியாபாரிகளுக்கானதல்ல என அறிவுறுத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு தரப்பில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே நீதிபதிகள் அமர்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.
ஏற்கனவே விசாரணையின்போது மனுதாரர், 'உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழநி நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. கடையடைப்பு நடந்தது,' என தெரிவித்தார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று விசாரித்தது.
அரசு தரப்பு: உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழநி நகராட்சி தீர்மானம் நிறைவேற்றவில்லை. உள்ளூர் மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய பாதையில் யாரையும் அனுமதிக்காமல் இருப்பது தடையாக உள்ளது; மக்களுக்கு சிரமமாக உள்ளது. மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: பக்தர்களின் நலன் சார்ந்து நகராட்சி செயல்பட வேண்டும்.
கிரி வீதி பக்தர்களுக்கானதே; வியாபாரிகளுக்கானதல்ல என அறிவுறுத்தி அரசு தரப்பில் 4 வாரங்களில் முறையாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.