ADDED : மார் 11, 2025 05:14 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் இல்லாததால் உட்கார வழியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இங்கிருந்து தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருவதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். புதிதாக ரூ.1.50 கோடி மதிப்பில் வணிக வளாகத்துடன் கட்டப்பட்ட அம்பேத்கர் பஸ்ஸ்டாண்ட் ஜன.12ல் திறக்கப்பட்டது.
68வது சுதந்திர தின விழாவில் மாநில அளவில் 2வது சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்பில் இருந்த இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. அதன் பின் அவற்றை சீரமைக்கவில்லை. இந்த 2 பஸ் ஸ்டாப்பிலும் இருக்கைகள் இல்லை. பஸ்சுக்காக காத்திருப்போர் அமர்ந்திருக்க வழியின்றி நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிறனர். குறிப்பாக வயதானோர், குழந்தைகளுடன் வரும் பெண்கள் அமர வழியின்றி கால்கடுக்க வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். அருகில் கடைகளின் வாசல், படிக்கட்டுகளில் உட்காரும் நிலை உள்ளது. எனவே இருக்கைகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.