ADDED : மார் 11, 2025 05:18 AM
என்.எஸ்.எஸ்., முகாம்
மதுரை: மஞ்சம்பட்டியில் எம்.ஏ.வி.எம்.எம் ஆயிர வைசியர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. முதல்வர் சிவாஜி கணேசன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பேராசிரியர் செல்வகுமார் பாண்டி வரவேற்றார். காந்தி மியூசிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் 'உலகத் தலைவர் மகாத்மா காந்தி'எனும் தலைப்பில் பேசுகையில், 'கடவுளை நெருங்கவும், வாழ்க்கையில் சாதிக்கவும், மனதில் தீய எண்ணங்கள் நீங்கவும், முழுமையான மனிதனாக வாழவும், அக அமைதி பெறவும் உண்மை பேச வேண்டும். உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் மகாத்மா காந்தி. ஆகையால் உலகத் தலைவராக இன்றும் போற்றப்படுகிறார்' என்றார். பேராசிரியர் நாகராஜன் நன்றி கூறினார். மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி, பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.
நுாற்றாண்டு விழா
சோழவந்தான்: தாரப்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு திருக்குறள், கட்டுரை, கவிதை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் ரேவதி, லட்சுமி, வசந்தி ஆகியோருக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ராஜேஸ்வரி நுாற்றாண்டு விழா நினைவு பரிசு வழங்கினார். முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராமமக்கள் பங்கேற்றனர்.
ஆண்டு விழா
செக்கானுாரணி: மீனாட்சி பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா தலைமையாசிரியை சிவபாலா தலைமையில் நடந்தது. ஆசிரியை இந்திரா வரவேற்றார். ஆசிரியை ஜெகஜோதி ஆண்டறிக்கை வாசித்தார். தலைமையாசிரியர்கள் தோப்பூர் லிங்கேஸ்வரி, வடக்கம்பட்டி முத்துக்குமார், மாயாண்டிபட்டி திவ்யநாதன், வடபழஞ்சி முகிலன் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கினர். கலை நிகழ்ச்சி நடந்தன. ஆசிரியர் தியாகு நன்றி கூறினார்.