திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் உலக பால் தின இணைய வழி கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். மாணவி கங்காதேவி வரவேற்றார். துறைத் தலைவர் கோபிமணிவண்ணன், 'பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு டம்ளர் பால் அவசியம்' என்றார்.
திருச்சி ஐமென் கல்லுாரி பேராசிரியர் வித்யா, 'தரமான ஊட்டச்சத்தை வழங்குவதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தயிர், மோர் சிறந்த மாற்றாகவும், குடல் சார்ந்த நோய்களுக்கு மருந்தாகவும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கவும் திறன் பெற்றவை' என்றார். உதவி பேராசிரியர் சரஸ்வதி ஒருங்கிணைத்தார். மாணவர் ராகவன் நன்றி கூறினார்.