/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்த மாணவர்கள் தமுக்கம் மைதானத்தில் குவியும் இளைஞர்கள்
/
மதுரை புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்த மாணவர்கள் தமுக்கம் மைதானத்தில் குவியும் இளைஞர்கள்
மதுரை புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்த மாணவர்கள் தமுக்கம் மைதானத்தில் குவியும் இளைஞர்கள்
மதுரை புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்த மாணவர்கள் தமுக்கம் மைதானத்தில் குவியும் இளைஞர்கள்
ADDED : செப் 09, 2024 05:42 AM

மதுரை : ஒரு நல்ல புத்தகம் ஒரு மனிதனின் குணாம்சங்களையே மாற்றக்கூடிய சக்தி படைத்தது. எந்த நிலையில் இருந்தாலும் காலத்திற்கேற்ப இன்று வரை அறியாத பல தகவல்களும், வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளும், பொழுது போக்குக்காக பயன்படும் நாவல்களும் நம் வாழ்க்கைப் பயணத்தில் பெரிய பங்காற்றுகின்றன.
புத்தகங்களை வாசிக்க வாசிக்க நம் கற்பனைத் திறன் வளர்ந்து, விரிவடைந்து, நம்மை ஒரு தனி உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இதுவரை நாம் பார்த்திராத பாத்திரங்களையும், இடங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட புத்தகங்களை பெரியவர்களை காட்டிலும் இளைஞர்கள், இன்றுள்ள இளம் தலைமுறையினர் அமிர்தம் போல நினைத்து நேரம் செலவழித்து தேடித் தேடி பை நிறைய புத்தகங்களை வாங்கி செல்வது ஆரோக்கியமான ஒன்று.
மதுரை புத்தகத் திருவிழாவில் சிறுவர்களை கவரும் வகையில் இங்குள்ள 231 ஸ்டால்களில் பெரும்பாலும் சிறுவர் இலக்கிய புத்தகங்கள் சென்ற ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. செப். 16 வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். மாலை 6:00 மணிக்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், கருத்தரங்கு நடைபெறும். அனுமதி இலவசம். பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்பனையில் தள்ளுபடி உண்டு.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் பள்ளி மாணவர்கள் 2000 பேர், கல்லுாரி மாணவர்கள் 1500 பேரை பஸ்சில் இலவசமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கற்பனை உலகை அவிழ்க்கும் புத்தகங்களைதேடித் தேடி வாங்கிய மாணவர்கள் கூறியதாவது:
அனைவருக்கும் வாசிக்கும் பழக்கமுண்டு
- யாழினி, திருப்பரங்குன்றம்
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் வாசிக்கும் பழக்கம் உண்டு. அதனால் எனக்கும் அப்பழக்கம் தொற்றிக் கொண்டது. தினமும் சில மணி நேரங்களாவது வாசிக்க செலவிடுவேன். சுய மேம்பாட்டு புத்தகங்கள் மீதும், கற்பனை கதைப் புத்தகங்கள் மீதும் ஆர்வம் அதிகம் உண்டு. என் தந்தை ஒரு எழுத்தாளர். அவருடைய புத்தகம் இங்கு வெளியிடப்படுகிறது. அதனுடன் நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்கள் மீது மிகஅதிக ஆர்வம் உண்டு. இதனால் புத்தகக் கண்காட்சியில் தவறாமல் பங்கேற்பேன்.
தன்னை அறிய உதவும் புத்தகங்கள்
- உமா மஹேஸ்வரி, தெப்பக்குளம்
தொடக்கத்தில் புனைகதைகள் இல்லாத புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். தற்போது தத்துவப் புத்தகங்கள் அதிகம் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அப்புத்தகங்கள் நம் வாழ்க்கையில் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதல் ஆர்வத்துடன் வாசிக்க முடிகிறது. கலைஞர் நுாலகம் இங்கு துவங்கியது பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. அது பலரின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தியுள்ளது. ஒரு மனிதன் மற்றவரைப் பற்றியும், தன்னை பற்றியும் அறிவதற்கு புத்தகம் போல வேறொன்று கிடையாது.
புத்தகங்கள் மீது கொள்ளை ஆசை
- வரதராஜன், வெள்ளாலப்பட்டி
புனைவு கதைகள் தொடங்கி மனித வாழ்வியலை வெளிப்படையாக சொல்லும் புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் போன்ற புத்தகங்கள் என்னை பெரிதும் பாதித்தவை. ஏனென்றால் என் தாத்தா என்னை வளர்த்தார். கள்ளிக்காட்டு இதிகாசத்தில் என்னையும் என் தாத்தாவையும் பார்ப்பது போல இருந்தது. அதிலிருந்து வாழ்க்கைக்கு நெருங்கிய புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். நா.முத்துக்குமார் கவிதைகள் தொகுப்பு எனக்கு பிடிக்கும்.
தனிமையை போக்கும் தோழன்
- மங்கையர்க்கரசி, சிவகங்கை
பிளஸ் 1 படிக்கும் போது எங்கள் தமிழாசிரியர், 'என்னிடம் இத்தனை புத்தகங்கள் இருக்கின்றன, இத்தனை புத்தகங்கள் வாசித்துள்ளேன்' என அடிக்கடி சொல்வார். எனவே வாசிக்காவிட்டாலும் புத்தகங்களை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று விளையாட்டுத்தனமாக துவங்கியது. கிராமக் கதைகள், கிராம வாழ்க்கை முறையை சொல்லும் புத்தகங்கள், பெண்ணியம் சார்ந்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். கிராம பெண்களின் சுதந்திர செயல்பாடுகளுக்கு உள்ள தடைகளை சுட்டிக்காட்டும் புத்தகங்கள் பிடிக்கும். தனிமையை போக்கி, வாசிக்கும் போது நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் தோழனாக இருப்பது புத்தகங்கள்தான்.