ADDED : ஆக 29, 2024 05:28 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் துவரை சாகுபடியை அதிகரிக்க மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் துணை இயக்குநர் மேரி ஐரீன் ஆக்னெட்டா கூறியதாவது: வாடிப்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் அதிகமாகவும் மற்ற பகுதிகளில் சிறிதளவுமாக 1970 எக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடியாகிறது. இவற்றின் பரப்பை 2570 எக்டேராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையின் மாநில திட்டத்தின் கீழ் 700 ஏக்கரில் விவசாயிகள் செயல்விளக்கத் திடல் அமைக்க விதை, இடுபொருள் செலவுக்கு 50 சதவீதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கப்படும். துவரையை வரப்பு பயிராகவோ தனிப்பயிர் அல்லது ஊடுபயிராகவோ விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
கோ 8, எல்.ஆர்.ஜி.52 ரகங்கள் 120 நாட்களில் அறுவடையாகும். சமீபத்திய விலை உயர்வால் நெற்பயிருடன் ஒப்பிடும் போது கிலோ துவரை ரூ.150க்கு விற்கலாம். ஏக்கருக்கு 1000 கிலோ அறுவடை செய்யலாம். வேளாண் விரிவாக்க மையங்களில் 2230 கிலோ விதைகள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதை பயன்படுத்தி துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம் என்றார்.

