/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
3468 பயனாளிகளை தேர்வு செய்யும் பணி
/
3468 பயனாளிகளை தேர்வு செய்யும் பணி
ADDED : ஜூலை 02, 2024 05:57 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் 3 ஆயிரத்து 468 பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
இத்திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளை மாற்றி பாதுகாப்பான, நிரந்தர, கான்கிரீட் வீடுகளை அமைக்க உள்ளனர்.
இத்திட்டத்தில் 2030ம் ஆண்டுக்குள் மாநில அளவில் கிராமங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தாண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் மதுரை மாவட்டத்தில் 3468 பேருக்கு வீடு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா கூறியதாவது: ஒவ்வொரு வீடும் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். தேர்வாகும் பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதோருக்கு, இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்ட பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அரசின் திட்ட மதிப்பீட்டுக்கு மேல் கூடுதலாக, பயனாளியே தொகையை சேர்த்து தாம் விரும்பும் வகையில் வீடுகட்டவும் வாய்ப்பு உள்ளது. பயனாளிகள் அத்தொகையை கூட்டுறவு வங்கிகளில் கடனாகவும் பெறலாம்.
இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. தகுதியானவர்களை உறுதி செய்ய கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், உதவிப் பொறியாளர், ஒன்றிய பொறியாளர், ஏ.பி.டி.ஓ., ஒன்றிய மேற்பார்வையாளர் உள்ளனர். குடிசை வீடுகளின் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்ற பின் இறுதி செய்யப்படும் என்றார்.