ADDED : மே 09, 2024 05:35 AM
திருப்பரங்குன்றம் பகுதியில் பசுமலை, ஹார்விபட்டி, திருநகர், தோப்பூர், கூத்தியார் குண்டு பஸ் ஸ்டாப்களும், இடையில் மூலக்கரை, முல்லைநகர், தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் பஸ் ஸ்டாப்களும் உள்ளன. இந்த ஸ்டாப்களில் குறைவான பயணிகள் நின்று கைகாட்டினால் பல அரசு டவுன் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ்சில் பயணிப்போர் இறங்க வேண்டும் என்றால்தான் நிற்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தியே சிலர் பஸ் ஏறுகின்றனர்.
இதனால் நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நெரிசல் பயணிகளுடன் பறக்கும் ஷேர் ஆட்டோக்களை நாடுகின்றனர். திருமங்கலத்தை தாண்டியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் இதே பாணியை கடைபிடிப்பதால் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.
பள்ளி, கல்லுாரி பகுதிகள் பசுமலை, மூலக்கரை, ஹார்விபட்டி, திருநகர் 3வது பஸ் நிறுத்தத்தில் வீடுதிரும்ப மாணவர்கள் காத்திருக்கும்போது தொலைவில் சென்று பஸ்சை நிறுத்தி ஓட்டம் பிடிக்கின்றன. அதனை பிடிக்க மாணவர்கள் ஓடும்போது சிலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே பயணிகளின் எண்ணிக்கையை கண்டு நிறுத்தங்களை புறக்கணிக்காமல் செல்லும்படி பஸ் ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.