/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டாந்தரையாக இருந்ததை மாற்றி அசத்தல்
/
கட்டாந்தரையாக இருந்ததை மாற்றி அசத்தல்
ADDED : மார் 22, 2024 05:03 AM

மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கட்டாந்தரையாக கிடந்த ஊருணியை புதுப்பித்து நீர் நிறைத்து மக்கள் பயன்பாட்டுக்கு மாற்றி சாதனை படைத்துள்ளனர். தவிர 23 ஊருணிகளுக்கு உயிரூட்டி அசத்தி இருக்கின்றனர் மதுரை தானம் அறக்கட்டளையின் வயலகம் அமைப்பினர்.
திருப்பரங்குன்றம் ஹார்விநகர் சூறாவளி மேடு கண்மாய் மீட்கப்பட்டது குறித்து அமைப்பு தலைவி ஆண்டாள் கூறியதாவது:
3 ஏக்கர் பரப்பில் உள்ள இக்கண்மாயை நம்பி 50 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் நடந்தது. குடியிருப்புகளான பின் வரத்து கால்வாய் துார்ந்து குப்பை கொட்டும் இடமானது. தானம் அறக்கட்டளை, மாநகராட்சியுடன் இணைந்து ஹைடெக் அராய் நிறுவனம் மூலம் ரூ.21 லட்சம் செலவில் குப்பை அகற்றப்பட்டு துார்வாரி வரத்துக் கால்வாய் மீட்டு கரை, பூங்கா அமைத்து சீராக்கினோம். தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.
உலகனேரி நிலவூரணி ஊருணி மீட்பு குறித்து அமைப்பு தலைவி தமிழரசி கூறுகையில், ''சிறிய குட்டையாக இருந்தது. அகலமான கரை அமைத்து 150 மரக்கன்றுகள் நட்டோம். தற்போது 60 மரங்கள் வளர்ந்து பறவைகளுக்கு உணவும், நமக்கு நிழலும் தருகின்றன'' என்றார்.
மாநகராட்சி பகுதிக்குள் 23 ஊருணிகளை மீட்டது குறித்து வயலகம் அணி திட்டத் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: 8 ஊருணிக்கு மாநகராட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஹைடெக் அராய் நிதியுதவியுடனும் 15க்கு தடையில்லா சான்றிதழ் பெற்று எச்.சி.எல். பவுண்டேஷன் உடன் இணைந்து சீரமைத்தோம். மண்டேலா நகரில் அம்பட்டையான் ஊருணி, அயன்பாப்பாகுடியில் தும்பசேரிமேடு, வில்லாபுரத்தில் குச்சிலியான், உத்தங்குடியில் நிலவூரணி, அவனியாபுரத்தில் மொட்டச்சி ஊருணிகள் அதற்கான அடையாளமின்றி கட்டாந்தரையாக காணப்பட்டன. அதை சீரமைத்து ஊருணியாக்கினோம்.
மாநகராட்சி பதிவேட்டில் 33 ஊருணிகள் இருப்பதும் அதற்கான கணக்கீடும் உள்ளது. மீதி 44 ஊருணிகள் வரைபடத்தில் மட்டுமே இருந்தது. அதைத்தேடி கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி கடந்தாண்டு மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயனிடம் ஒப்படைத்தோம். கிராமப்புறங்களில் ஊருணி எல்லாவற்றுக்கும் பயன்படும்.
மாநகராட்சியிலும் மக்களுக்கும் ஊருணிக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்த நினைத்து சாதித்துள்ளோம் என்றார்.

