/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
மதுரையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 08, 2025 04:00 AM

மதுரை : மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழாக்கள் நடந்தன.
அமெரிக்கன் கல்லுாரியில் முதுநிலை பொருளாதார துறையில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி துறைத் தலைவர் முத்துராஜா தலைமையில் நடந்தது. மாணவி சண்முக லாவண்யா வரவேற்றார். முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினர்களுக்கு விருது வழங்கினார்.
தமிழ்நாடு இறையியல் கல்லுாரி முதல்வர் மார்க்கரெட் கலைசெல்வி, எழுத்தாளர் அனுஜா சந்திரமவுலி, டாக்டர்கள் சுதாதீப், செல்வராணி ஆகியோருக்கு 'மகளிர் தின சாதனை' விருது வழங்கப்பட்டது. இளங்கலை துறைத் தலைவர் கண்ணபிரான் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி பாக்யா நன்றி கூறினார்.
வருமான வரித்துறை
மதுரை வருமான வரித்துறை மகளிர் சங்க விழாவில் முதன்மை கமிஷனர் வசந்தன், கூடுதல் கமிஷனர் சந்திரசேகரன், துணை கமிஷனர் சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் டாக்டர் சுஜாதா சங்குமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், 'குழந்தை வளர்ப்பு மற்றும் மகளிர் ஆரோக்கியம்' குறித்து பேசினார். போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
திருப்பரங்குன்றம்
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சுசீலா தேவி ரகுபதி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். வரலாற்று துறை தலைவர் உமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்.ஐ. கார்த்திகாயினி, மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி காவியா தொகுத்துரைக்க, மாணவி தாமரை நன்றி கூறினார்.
* சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி வரவேற்றார். மாணவி வர்ஷினி பேசினார். மணமகள் அலங்காரம், பேஷன் ஷோவில் வென்ற மாணவி விஜய சிவசங்கரிக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி ஹரிணிபிரியா நன்றி கூறினர்.
உசிலம்பட்டி
கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் தலைவர் ஜான்பிரகாசம் தலைமையில் நடந்தது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். செயலாளர் அந்தோணிசாமி, துணை முதல்வர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர். காந்திகிராம கிராமிய கல்வி நிறுவன பயன்பாட்டு ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியர் ஹிலாரியாசவுந்தரி பங்கேற்று பேசினார். கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.
எம். கல்லுப்பட்டி ஸ்டேட் பாங்க் கிளையில் மேலாளர் வசந்தி தலைமை வகித்தார். துணை சுகாதார மைய மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு தலைமையில் மருத்துவ, ரத்ததான முகாம்கள் நடந்தன. போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை துணை மேலாளர் விக்னேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.