/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலம்பாட்டத்தில் சாதித்த 16 வயது மதுரை மாணவி தற்கொலை காயத்தால் மனஉளைச்சல்
/
சிலம்பாட்டத்தில் சாதித்த 16 வயது மதுரை மாணவி தற்கொலை காயத்தால் மனஉளைச்சல்
சிலம்பாட்டத்தில் சாதித்த 16 வயது மதுரை மாணவி தற்கொலை காயத்தால் மனஉளைச்சல்
சிலம்பாட்டத்தில் சாதித்த 16 வயது மதுரை மாணவி தற்கொலை காயத்தால் மனஉளைச்சல்
ADDED : நவ 07, 2025 05:51 AM
மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறு வயதில் இருந்தே சிலம்பம் விளையாடியும், சிலம்பாட்டத்தின்போது ஆசனங்கள் செய்தும் மாநில அளவில் பல பதக்கங்களை பெற்றார். தேசிய போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. 3 மாதத்திற்கு முன்பு வலது கை மணிக்கட்டு அருகே வலி ஏற்பட்டது. ஸ்கேன் பார்த்தபோது ஜவ்வு விலகியது தெரிந்தது. பெற்றோர் ஆனையூர் பகுதிக்கு அழைத்துச் சென்று தனியாரிடம் மாவுக்கட்டு போட்டுள்ளனர். சில நாட்களில் இரு கைகளிலும் வலி ஏற்பட்டு சிலம்பம் சுழற்ற முடியாமலும் பேனா பிடித்து பள்ளித் தேர்வு எழுத முடியாமலும் மாணவி தவித்தார்.
இதற்கிடையே கடும் சிரமத்திற்கு இடையே மதுரை திருமங்கலம் பகுதியில் நடந்த மாவட்ட போட்டியில் கலந்து கொண்டு 3வது பரிசை பெற்றார். அப்போது 'என் ஸ்டைலில் சிலம்பம் ஆட முடியவில்லை. கை ரொம்ப வலிக்கிறது. இதனால் தான் எனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை' எனக்கூறி அழுது 3வது பரிசை அவர் பெறவில்லை. ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு வாரமாக ஓமியோபதி மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து கை வலிப்பதாக கூறி வந்தவர், தன்னால் முன்புமாதிரி சிலம்பம் சுழற்ற முடியவில்லையே என மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். பெற்றோரும், அவரது சகோதரியும் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
குடும்பத்தினர் கூறியதாவது: தேசிய போட்டியில் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்ததால் பள்ளி தேர்வு எழுத முடியாமல் தவித்தார். அடுத்தாண்டு எழுதிக் கொள்ளலாம் என நாங்கள் கூறியபோதும் மன உளைச்சலில் இருந்தார். தேசிய அளவில் சாதித்து பதக்கங்களோடு செய்தியில் வர வேண்டுமென நினைத்தவர், இப்படி செய்தியில் வரும் நிலைக்கு ஆளாகிவிட்டாளே.
இவ்வாறு கூறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

