ADDED : டிச 11, 2024 06:52 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மேல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் மகா தீபம் ஏற்றக்கோரி ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா உட்பட ஹிந்து அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். நேற்று 16 கால் மண்டபம் அருகே ஹிந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், செயலாளர்கள் குற்றாலநாதன், சேவுகன், தென்னிந்திய பா.பி. நிறுவனர் திருமாறன் பேசினர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். தலைவர் குரு, அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் மோகனா, கோட்ட பொறுப்பாளர் அரசுபாண்டி, பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டனர்.
பெண்கள் முளைப்பாரி, பால்குடம், காவடி எடுத்தும், தீபங்கள் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் 200க்கும் மேற்பட்டோர் தீபங்களை கையில் ஏந்தி மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்ற செல்ல முயன்றனர். மலை மேல் செல்ல முயன்ற 162 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

