ADDED : டிச 01, 2025 06:02 AM

மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சிந்தாமணி பகுதியில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட கிராமப்புறங்களைச்சேர்ந்த ஒரு பெண், இரு ஆண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் பிரத்யேக காய்ச்சல் வார்டு தயாராக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் நேற்று 25 பேர் 'ப்ளு' வைரஸ் உட்பட பல்வேறு வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 68 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா தொற்று பதிவாகவில்லை. பனி, மழை அதிகமாக இருப்பதால் காய்ச்சல், டயரியா, இணை நோய் உள்ளவர்களுக்கு கூடுதல் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: தொடர்மழை பெய்வதால் தண்ணீர் தேங்காமல் வழிந்து விடுவதால் டெங்கு கொசு இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
மதுரையில் 4 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பதால் அச்சம் தேவையில்லை. வீடுகளில் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
காய்ச்சல் கூடுதலாக உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் காய்ச்சல் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் புகை மருந்து தெளிப்பவர்கள் மூலம் சுற்றுப்புறங்களில் டெங்கு கொசு இனப்பெருக்கம் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் உடனே டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்றார்.

