/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் வரி விதிப்பால் சிக்கலில் 4000 தெருக்கள்: வகைப்படுத்தும் கணினி பதிவேற்றம் எப்போது முடியும்
/
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் வரி விதிப்பால் சிக்கலில் 4000 தெருக்கள்: வகைப்படுத்தும் கணினி பதிவேற்றம் எப்போது முடியும்
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் வரி விதிப்பால் சிக்கலில் 4000 தெருக்கள்: வகைப்படுத்தும் கணினி பதிவேற்றம் எப்போது முடியும்
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் வரி விதிப்பால் சிக்கலில் 4000 தெருக்கள்: வகைப்படுத்தும் கணினி பதிவேற்றம் எப்போது முடியும்
ADDED : ஜூலை 21, 2025 03:01 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் மைய வருவாய் பிரிவில் வகைப்படுத்தி கணினிப் பதிவேற்றம் செய்யப்படாத 4 ஆயிரம் தெருக்களுக்கு வகைப் பிரிவு மாற்றி வரி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி 72 வார்டுகளாக இருந்தபோது 2072 தெருக்கள் இருந்தன. 1.4.2011க்கு பின் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் மாநகர எல்லைக்குள் இணைக்கப்பட்டன. 28 வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பின் தெருக்களின் எண்ணிக்கை 3806 ஆக அதிகரித்தது.
மாநகராட்சியுடன் இணைவித்த பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தரிசு, விளை நிலங்களாக இருந்தன. இவ்வகை நிலங்களில் தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள் கட்டப்பட்டன.
இதையடுத்து 1.4.2022ல் அவசர அவசரமாக வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. இதனால் மாநகராட்சியில் மொத்த தெருக்களின் எண்ணிக்கை 8,098 ஆக உயர்ந்தன. மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திலும் இந்த தெருக்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தலும் நடந்தது.
ஆனால், இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் எந்த வகை பிரிவில் இடம் பெறுகின்றன, அவை முறையாக மாநகராட்சி மைய வருவாய் பிரிவில் கணினி பதிவேற்றம் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால் முறையான வரிவிதிப்பு மேற்கொள்ள முடியாமல் பெரும்பாலான பகுதிகளில் 'ஏ' வகை பிரிவுக்கான சொத்துவரி நிர்ணயிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் அதிக வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
மக்கள் விழிப்புணர்வு மேம்பாட்டு சேவை மையம் செயலாளர் தேசிகாச்சாரி கூறியதாவது: மாநகராட்சியில் ஏ, பி, சி என மூன்று வகை பிரிவில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. 1.4.2022ல் நடந்த வார்டுகள் மறுவரையறைக்கு பின் 8,098 தெருக்கள் உருவாகின. அவற்றில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை மைய வருவாய் பிரிவில் கணினி பதிவேற்றம் செய்யாததால் அங்குள்ள வீடுகள், வணிக கட்டடங்களுக்கு எந்த வகைப் பிரிவு வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது.
உதாரணமாக அவனியாபுரம் பகுதியில் 88 தெருக்கள் கணினி பதிவேற்றம் செய்யப்படவில்லை. இப்பகுதி சி வகைப்பாடு கொண்டது. ஆனால் ஏ வகைப்பாட்டு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் அப்பகுதி மக்கள் மூன்று மடங்கு அதிக வரி செலுத்துவதாக புலம்புகின்றனர்.
சில தெருக்களில் வரிகுறைவாகவும் வசூலிக்கப்படுகிறது. எனவே வகைப்பாட்டின்படி தெருக்களை பிரித்து முறையாக கணினி பதிவேற்றம் செய்யும் நடவடிக்கையை முந்தைய கமிஷனர் தினேஷ்குமார் மேற்கொண்டார். அவர் பதவி உயர்வு பெற்று மாற்றலாகி சென்றார். எனவே தற்போதைய கமிஷனர் சித்ரா இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.