ADDED : ஜூலை 21, 2026 03:41 AM

திருப்பரங்குன்றம்-: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள மேம் பாலத்தில் பள்ளங்கள், மணல் குவியல், செடிகள் வளர்வது போன்றவற்றால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
பாலத்தின் பல இடங்களில் இணைப்பு பகுதியில் தரைத்தளம் பெயர்ந்து உள்ளது. அந்த இடத்தை வாகனங்கள் கடக்கும்போது குறுக்கே உள்ள இரும்பு பட்டைகளில் சக்கரம் ஏறிஇறங்கி தடக் தடக் என ஒலி கிளம்புகிறது. பாலத்தின் இரு புறமும் மணல்கள் அதிக அளவில் குவிந்துள்ளன. இதனால் வாகனங்கள் சறுக்கும் நிலை உள்ளது.
இருபுறமும் பல்வேறு இடங்களில் செடிகள் வளர்ந்து மரங்களாகி வருகிறது. பாலத்தின் வெளிப்பகுதியில் பல இடங்களிலும் செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பாலத்தின் மின்விளக்குகள் பல நாட்கள் சரிவர எரிவதில்லை.
ரோட்டின் பள்ளத்தை சீரமைத்தாலும் மீண்டும் சேதமடைகிறது. பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
