/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
/
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
UPDATED : அக் 03, 2025 06:51 AM
ADDED : அக் 03, 2025 06:47 AM

மதுரை: மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு மஹன்யாஸ் இணைந்து இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கு கலைமகள் சரஸ்வதி தேவி ஆசியுடன் கல்விக் கண் திறந்து வைக்கும் 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தாவனம் நிர்வாகத்திற்கு உட்பட்டது) நேற்று கோலாகலமாக நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தினமலர் சார்பில் விஜயதசமி நன்னாளில் நெல்மணிகள் மீது குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. பள்ளி வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் கல்விக் கோயிலுக்குள் செல்லும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்களின் செல்லக் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
ஏற்கனவே முன்பதிவு செய்த பெற்றோருக்கு தினமலர், மஹன்யாஸ் சார்பில் வித்யாரம்பத்திற்கு தேவையான தேங்காய், பழம், தாம்பூலம் தட்டு, பச்சரிசி, இனிப்பு, வெற்றிலை பாக்கு, 'சீமா' நோட்புக் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டன. ஆறு சுற்றுகளாக பெற்றோர் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், வித்யாரம்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அதில் அரிச்சுவடியை ஆரம்பிக்கும் முன் பெற்றோர் 'ஓம்... எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்க' வேண்டிக்கொண்டார். தாம்பூலத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த பச்சரிசியில் குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து பெற்றோர் 'அ'னா எழுதி பழகிக்கொடுத்தனர்.
அப்போது ஸ்தல அர்ச்சகர், 'சரஸ்வதி, விரும்பியவற்றை தருபவளே, நான் கல்வி கற்க ஆரம்பிக்கிறேன். நீங்கள் தான் அருள் செய்ய வேண்டும்' என பெற்றோரிடையே கூறி, 'உங்கள் குலதெய்வத்தை நினைத்துக்கொண்டு, கல்விக்கடவுள் சரஸ்வதியை நினைத்துக்கொண்டு ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் முதலில் ஆசீர்வதியுங்கள்' என கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து பெற்றோர் தங்கள் செல்லக் குழந்தைகளை மனமுருகி ஆசீர்வதித்தனர்.
தினமலர் நாளிதழுக்கு நன்றி
பின், 'கலைமகள் சரஸ்வதியின் பரிபூரணம் கிடைத்து ஒவ்வொரு குழந்தையும் கல்வி, கேள்வி, ஞானம், வைராக்கியம் போன்ற பேறுகள் பெறுவர்' என அர்ச்சகர் வாழ்த்தினார்.
குழந்தைகளுடன் பெற்றோர், பாட்டி, தாத்தா என உறவினர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களின் சுட்டிக் குழந்தைகளின் அரிச்சுவடி ஆரம்பத்தை கண்கொட்டாமல் ரசித்து பெருமைப்பட்டு, இந்நிகழ்ச்சியை நடத்திய தினமலர் நாளிதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்து சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாக அறங்காவலர் மதுராந்தக நாச்சியார் ராணி அனுமதியுடன் கண்காணிப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் உறுதுணையாக இருந்தனர். திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் பெற்றோர், குழந்தைகள் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளை தினமலர் நாளிதழ் செய்தது.
இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை ஸ்பான்சர் அம்மன் உயர்தர சைவ உணவகம். கோ ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி, மதுரை ஸ்ரீநர்சீங் ஸ்வீட்ஸ் லிமிடெட், கார்த்திகா அண்ட் கோ, பி.ஜி., நாயுடு ஸ்வீட்ஸ்.
சரஸ்வதியை போற்றினால் கல்வி அறிவு பெருகும்
விஜயதசமி நன்னாளில் பள்ளி செல்ல தயாராகும் குழந்தைகள் நெல்மணியில் அனா ஆவன்னா எழுதுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்வியின் அரசியான கலைமகள் ஆசி கிடைத்தால் கல்வி அறிவு பெருகும்.
அதன்படி தினமலர் நாளிதழ் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சியை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடத்தி வருகிறது. இந்தாண்டு தினமலர் நாளிதழ் பவள விழா கொண்டாடும் நிலையில் இந்நிகழ்ச்சி மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் கட்டமைக்கப்பட்டு கல்வி, கேள்வி, ஞானம் அனைத்திலும் தேர்ச்சி பெற்று எதிர்காலம் பொற்காலமாய் அமையும்.
பெற்றோர் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஆர்வமாய் வந்து ஓம்... என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போது ஆனந்தமாய் உள்ளது. தினமலர் நடத்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அற்புதமான எதிர்காலம் உள்ளது.
- தர்மராஜ் சிவம்,
ஸ்தல அர்ச்சகர், இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
குழந்தைகளுக்கு கல்வி கண் திறக்கும் தினமலர்
தினமலர் நாளிதழ் சமூக அக்கறையுடன் கல்வி, மாணவர்கள் நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகளுக்கான அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்துகிறது. என் குழந்தைகள்
அக் ஷரா ஸ்ரீ, ஆராதனா ஆகியோருடன் பங்கேற்றேன். பவள விழாவை கொண்டாடும் தினமலர், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சி மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்விக் கண் திறக்க ஏற்பாடு செய்வது சிறப்பு.
- சாந்தினி, விளக்குத்துாண்
பெங்களூருவில் இருந்து வந்தோம்
மகன் ரணதீரனுடன் பங்கேற்றேன். நாங்கள் தற்போது பெங்களூருவில் வசிக்கிறோம். ஒரு மாதம் விடுமுறைக்காக மதுரை வந்தோம். என் அத்தை ஹேமா தீவிர தினமலர் வாசகி. அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி குறித்து அவர் எங்களுக்கு தெரிவித்தார். அதற்கேற்ப விடுமுறையை அட்ஜெஸ்ட் செய்து இங்கு வந்துள்ளோம். இதன் மூலம் சரஸ்வதி அருள் கிடைக்க தினமலர் எங்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது.
- ஜெயபாலவர்த்தினி, எஸ்.எஸ்.காலனி
குடும்பத்தோடு பங்கேற்றோம்
என் மகன் துருவனை இந்தாண்டு பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தினமலர் நடத்தும் இந்நிகழ்ச்சியை தெரிந்து பதிவு செய்தோம். குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றோம். நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தினமலர் வழங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. அரிச்சுவடி நிகழ்ச்சியை ஆரம்பித்து மந்திரம் சொல்லி விளக்கம் அளித்தது நன்றாக இருந்தது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தினமலர்
நாளிதழ் குறித்து பெருமை கொள்கிறோம்.
- மோனிகா, கோ.புதுார்
தினமலர் நாளிதழை நினைத்து பார்ப்போம்
என் அம்மா கலா மீனாட்சி தினமலர் நாளிதழின் நீண்ட நாள் வாசகி. அவர்தான் இந்நிகழ்ச்சியை தினமலர் நடத்தும் தகவலை தெரிவித்தார். மகள் மோகிதாஸ்ரீயுடன் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றோம். தேவையான பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு அனைவருக்கும் வழங்கி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தையும் ஆர்வத்துடன் அரிசியில் 'அ'னா எழுதிய தருணம் மறக்க முடியாமல் அமைந்துவிட்டது. கல்வியில் நாளை என் மகள் சாதிக்கும் போது தினமலர் நாளிதழை
நாங்கள் நன்றியுடன் நினைத்து பார்ப்போம்.
- ஐஸ்வர்யா, செல்லுார்
சரஸ்வதி அருள் கிட்டியதால் மகிழ்ச்சி
பாரம்பரியமாக விஜயதசமியை கொண்டாடுகிறோம். மகள் ஆனந்த சயனாவுக்காக இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். ஒவ்வொரு குழந்தைகளின் கல்விக்கும் சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். அவரது இருப்பிடமான இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இருந்து அரிச்சுவடியை ஆரம்பித்தது சந்தோஷம். இதற்கு காரணமாக இருந்தது தினமலர். என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும். பெற்றோர் விரும்பியதை தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. விரும்பியதை படித்து சாதிக்க வேண்டும் என இந்த சன்னதியில் வேண்டிக்கொண்டேன்.
- அபர்ணா, பழங்காநத்தம்
கல்வியே அழியாத செல்வம்
என் மகள் நிரஞ்சனாவுக்காக வந்தேன். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் தான் தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். விரல் பிடித்து 'அ' னா எழுதி, என் மகளின் கல்விப் பயணத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளேன். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நன்றாக இருந்தது.
- ஸ்வாதிகா, அண்ணாநகர்
காத்திருந்து பங்கேற்றோம்
மகள் தீக் ஷிதாஸ்ரீக்காக எப்போது தினமலர் நாளிதழில் விளம்பரம் வரும் என எதிர்பார்த்திருந்து, காத்திருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருக்கும். அதனால் தான் குழந்தைகளின் கல்வி மிக முக்கியம் என ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறோம். இந்நிகழ்ச்சியில் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குறிப்பிட்டு, அர்ச்சகர் பல நல்ல விஷயங்களை எடுத்துரைத்தார். பெற்றோராக நான் என் குழந்தைக்கு ஆசி வழங்கும்போது 'நன்றாக படித்து பெரிய அதிகாரியாக வர வேண்டும்' என மனமுருகி வேண்டிக்கொண்டேன்.
- சரவணபிரியா, தத்தனேரி