ADDED : டிச 25, 2024 05:27 AM
மதுரை : வந்தே பாரத் ரயில்களில் தீவிபத்தை தடுக்க, ரயில்பெட்டி, கழிவறைகளில் சிறப்பு புகை நுகர்வு கருவிகள் பொருத்தப்பட்டுளளன. ரயில் பெட்டி ஒன்றுக்கு இதுபோன்று 10க்கும் மேற்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த டிச.22 ல் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) திண்டுக்கல் அருகே சென்றபோது, உயர்வகுப்பு இருக்கை பெட்டியில் புகை நுகர்வு கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
இதனால் ரயில் வடமதுரையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் யாரோ ஒருவர் புகைபிடித்ததால் கருவி ஒலிஎழுப்பியது தெரிந்தது. அந்நேரத்தில் அப்பயணியை கண்டுபிடிக்க முடியாததால் ரயில் புறப்பட்டது. ரயில்வே போலீசார் ரயில் பெட்டியில் பொருத்தியிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில், பிளாட்பாரங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி புகைப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

