/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கருணை பணி பெற்றவர் கல்வி தகுதிக்கேற்ப உரிமை கோர முடியாது'
/
'கருணை பணி பெற்றவர் கல்வி தகுதிக்கேற்ப உரிமை கோர முடியாது'
'கருணை பணி பெற்றவர் கல்வி தகுதிக்கேற்ப உரிமை கோர முடியாது'
'கருணை பணி பெற்றவர் கல்வி தகுதிக்கேற்ப உரிமை கோர முடியாது'
ADDED : ஜன 04, 2026 06:49 AM

மதுரை: கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியை கோர முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
அபிராமி என்பவர் தாக்கல் செய்த மனு:
கருணை அடிப்படையில் தற்காலிகமாக 2025 ஜூலை 7ல் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டேன். என்னிடம் தட்டச்சு சான்று உள்ளது.
என் கல்வி மற்றும் பிற கூடுதல் தகுதிகள் அடிப்படையில், இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சராக அதற்குரிய சம்பளத்துடன் அதே தேதியில் மறு நியமனம் மேற்கொள்ள வலியுறுத்தி, உயர்நீதிமன்றக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல், தேனி முதன்மை மாவட்ட நீதிபதிக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் நியமனமே கருணை அடிப்படையில் செய்யப்பட்ட பின்கதவு வழியாக நுழைந்த நியமனம். ஏனெனில் அவரது கணவர் பணியில் இருந்தபோது இறந்துவிட்டார்.
எனவே கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியை மனுதாரர் கோர முடியாது. தான் உயர் தகுதி பெற்றவர் என அவர் கருதினால், கருணை அடிப்படையிலான நியமனத்தின் மூலம் அல்லாமல், போட்டித் தேர்வு மூலம் அப்பணியை பெற வேண்டும்.
ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்துவிடும் சூழலில், குடும்பத்தின் திடீர் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவே கருணை பணி நியமனம் வழங்கப்படுகிறது. தவறான புரிதல் அடிப்படையில் இம்மனுவில் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

