
ரோட்டில் கழிவுநீர்
மதுரை ரிசர்வ் லைன் பழனிச்சாமி நகர் குடியிருப்பு பகுதியில் ரோடு மேடும் பள்ளமுமாக உள்ளது. பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பழனிசாமி, ரிசர்வ் லைன்
சட்டுபுட்டுன்னு முடிங்க
மதுரை 46 வது வார்டு லட்சுமிபுரம் 5 வது தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணிகள் நத்தை வேகத்தில் 27 நாட்களாக நடக்கிறது. பணியாட்கள் சில நாட்கள் பணிக்கு வராததால், ரோட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும்.
- நீலகண்டன், கீழவாசல்
குண்டுகுழி ரோடுகள்
மதுரை 66 வது வார்டு நடராஜ் நகரில் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தரமான ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்திரன், நடராஜ் நகர்
ஆபத்தான பாலம்
சோழவந்தான் தென்கரை இணைப்பு பாலத்தில் பள்ளங்கள், விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் செல்வோர் நிலைதடுமாறி விழுவதுடன் பாலத்தின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவுரிநாதன் சோழவந்தான்
மழைநீர் தேக்கம்
உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் பஞ்சாயத்து பாண்டியன் நகர் ரோடுகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடை நிரம்பி கழிவுநீரும் கலப்பதால் இப்பகுதியினர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாசிலாமணி, உசிலம்பட்டி
வடிகால் வசதி தேவை
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 6வது தெரு விரிவாக்கப் பகுதியில் ரோடு அமைத்து 15 ஆண்டுகள் ஆகிறது. மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததால் சிறிய மழைக்கும் ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராதிகா, கிருஷ்ணாபுரம் காலனி