ADDED : அக் 21, 2024 05:12 AM
மேலுார்: கிடாரிபட்டி பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. வல்லாளபட்டியில் இருந்து சாம்பிராணிபட்டிக்கு செல்லும் வழியில் கிடாரிப்பட்டியில் தர்மம் குடிநீர் ஊருணி உள்ளது.
இவ் ஊருணியில் தான் கிராமத்தினர் தண்ணீர் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பெய்த மழை மற்றும் காற்றுக்கு ஊருணிக்குள் மின்கம்பி அறுந்து விழுந்தது.
நேற்று காலையில் குடிநீர் பிடிக்க சென்ற போது மின் கம்பி அறுந்து கிடந்தது கண்டு, உடனே கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மக்கள் ஊருணி கரையில் திரண்டனர். பிறகு அனைவரும் ஊருணியை சுற்றி பாதுகாப்பாக நின்று யாரும் தண்ணீரில் இறங்காதவாறு பாதுகாத்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்ததால், மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. மின்கம்பியை அகற்றிய பிறகே கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

