UPDATED : ஜூன் 30, 2026 09:57 PM
ADDED : ஜூன் 30, 2026 09:52 PM

மதுரை: தென்னை தொழிலாளர்களுக்கு 'கோரா சுரக் ஷா' எனும் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.143 பிரீமியம் செலுத்தினால் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: 18 முதல் 65 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேரலாம். விபத்து மரணம் அல்லது நிரந்தர முழு ஊனமுற்ற நிலைக்கு ரூ.7 லட்சம் காப்பீடு வழங்கப்படும். நிரந்தர பகுதியளவு ஊனமுற்ற நிலைக்கு ரூ.3.5 லட்சம், மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரை, ஆம்புலன்ஸ் கட்டணம், வாராந்திர இழப்பீடு, மருத்துவமனை தினசரி செலவு, இறுதிச்சடங்கு செலவு உள்ளிட்ட பல்வேறு நலன்கள் வழங்கப்படுகின்றன. பயனாளி ரூ.143 பிரீமியம் செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையை தென்னை வளர்ச்சி வாரியம் மானியமாக வழங்குகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய அலுவலரின் சான்றுடன் விண்ணப்பப் படிவம், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கின் முதல் பக்க நகலை இணைத்து தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் 72 மணி நேரத்திற்குள் தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பை தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். https://coconutboard.gov.in/docs/Appl-Kerasuraksha-Tamil.pdf என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என்றார்.
