/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., தள்ளுமுள்ளு! முறைகேட்டை கண்டித்ததால் வெளியேற்றம்
/
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., தள்ளுமுள்ளு! முறைகேட்டை கண்டித்ததால் வெளியேற்றம்
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., தள்ளுமுள்ளு! முறைகேட்டை கண்டித்ததால் வெளியேற்றம்
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., தள்ளுமுள்ளு! முறைகேட்டை கண்டித்ததால் வெளியேற்றம்
ADDED : ஜூலை 30, 2025 06:50 AM

மதுரை; மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், 'ரூ.பல கோடி சொத்து வரி முறைகேட்டில் மேயர் உதவியாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே மேயர் ராஜினாமா செய்ய வேண்டும்' எனக்கூறி அ.தி.மு.க., பா.ஜ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது தி.மு.க.,வினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவைக்காவலர்கள் மூலம் அ.தி.மு.க.,வினர் வெளியேற்றப்பட்டனர். இக்கூட்டம் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
மேயர் தீர்மானங்களை வாசித்தபோது அ.தி.மு.க., எதிர்க்கட்சித்தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் 'சொத்துவரி முறைகேடு நியாயமாக நடக்க மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும். இதுதான் மாநகராட்சியில் வசிக்கும் 20 லட்சம் மக்களின் எதிர்பார்ப்பு' எனக்கூறி கோஷமிட்டனர்.
தொடர்ந்து சோலைராஜா 'சொத்துவரி முறைகேடுக்கு மூளையாக செயல்பட்ட மேயரின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்மணி கணவர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் மேயரையும் இந்த விவகாரத்தில் விசாரிக்க வேண்டும்' என்றார். அதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, 'இந்த முறைகேடு அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தே நடந்துள்ளது. உங்கள் முன்னாள் அமைச்சரையும்(செல்லுார் ராஜூ), முன்னாள் மேயரையும் (ராஜன் செல்லப்பா) விசாரிக்க வேண்டும்' என எதிர்ப்பு கோஷமிட்டனர்.
தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மேயரை நோக்கி சென்றனர். அவர்களை தி.மு.க., கவுன்சிலர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேயர்: அ.தி.மு.க., ஆட்சியில் தான் அதிகம் சொத்துவரி முறைகேடு நடந்துள்ளது. தற்போது குற்றச்சாட்டு வந்தவுடனே முதல்வர் நடவடிக்கை எடுத்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உங்கள் ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வீட்டில் திருடுபோன ரூ.200 கோடியை பற்றி சொல்லுங்கள். அதை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்றார். இதையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜெயராஜ், தி.மு.க.,: சொத்துவரி முறைகேடு குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என முழு விபரம் தெரியவில்லை. ஆனாலும் குற்றச்சாட்டு இல்லை என நிரூபித்து வருவதற்காக மண்டல, நிலைக் குழு தலைவர்களை முதல்வர் பதவி விலக வைத்துள்ளார். சிறப்பு குழுவும் விசாரிக்கிறது.
ஜெயராம், தி.மு.க.,: 10 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியிலும் மாநகராட்சியில் இதுபோன்ற ஊழல், முறைகேடு நடந்துள்ளதால் அப்போது இருந்து மேயர், அதிகாரிகளிடமும் விசாரிக்க வேண்டும்.
கார்த்திகேயன், காங்.,: மாநகராட்சி வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்காவில் பராமரிப்பு இல்லை. 3 கூட்டங்களில் பேசியும் நடவடிக்கை இல்லை.
விஜயா, மா.கம்யூ.,: அம்மா உணவகத்தில் பழைய உணவு வழங்கப்படுகிறது. வைகையாற்றில் 16 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. விசாரிக்க வேண்டும்.
பாஸ்கர், ம.தி.மு.க.,: இன்னும் கவுன்சிலர்களுக்கு அலுவலகம் இல்லை.
நுார்ஜஹான், தி.மு.க.,: எனது 54 வது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை. போதிய பணியாளர், உபகரணங்கள் இல்லை. வேறு வார்டுடன் இணைத்துகூட விடுங்கள்.
பாமா, தி.மு.க.,: குடிநீர் பைப் மேல் ஆக்கிரமித்து கடை நடத்தப்படுகிறது. வரி செலுத்தவில்லை. எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.
போஸ் முத்தையா, தி.மு.க.,: அ.தி.மு.க., வெளியேறியதால் இன்று தான் பேச வாய்ப்பு கிடைத்தது. பாதாள சாக்கடை பணி உட்பட அனைத்து பணிகளும் மெதுவாக நடக்கின்றன. விரைவுபடுத்த வேண்டும்.