/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க., திட்டம்! எட்டுக்கு எட்டு கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் மட்டும்தான்
/
மதுரை தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க., திட்டம்! எட்டுக்கு எட்டு கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் மட்டும்தான்
மதுரை தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க., திட்டம்! எட்டுக்கு எட்டு கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் மட்டும்தான்
மதுரை தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க., திட்டம்! எட்டுக்கு எட்டு கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் மட்டும்தான்
UPDATED : மார் 19, 2026 08:13 AM
ADDED : மார் 19, 2026 05:58 AM

மதுரை: சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. 2 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படுகிறது. வெற்றியை தக்க வைக்க தற்போதைய 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ல் துவங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தையை துவங்கவில்லை. இருப்பினும் அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு பூத் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தற்போது 5 தொகுதிகள் அ.தி.மு.க., வசம் உள்ளது.
2021 தேர்தலில் மதுரை மேற்கு செல்லுார் ராஜூ, திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா, திருமங்கலம் உதயகுமார், மேலுார் பெரியபுள்ளான், உசிலம்பட்டி அய்யப்பன்(தற்போது தி.மு.க.,) வெற்றி பெற்றனர். அந்த தேர்தலில் அ.தி.மு.க., 8 தொகுதிகளில் போட்டியிட்டது. அதுபோல் இந்த தேர்தலிலும் 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மதுரை மேற்கு மதுரை மேற்கில் மூன்றாவது முறையாக செல்லுார் ராஜூ போட்டியிடுகிறார். இத்தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டதால் செல்லுார் ராஜூ மதுரை தெற்கில் போட்டியிடுவார் என பேச்சு எழுந்தது. ஆனால் 10 ஆண்டுகள் தொகுதிக்கு தான் செய்த பணிகள் வெற்றியை தேடி தரும் என்று நம்பிக்கையில் மீண்டும் இத்தொகுதியில் செல்லுார் ராஜூ போட்டியிடுகிறார்.
திருமங்கலம் இத்தொகுதியில் இம்முறை எப்படியாவது தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் காய் நகர்த்தி வருகிறார். இதனால் தற்போதைய எம்.எல்.ஏ.,வான உதயகுமாருக்கு பல்வேறு வகையில் நெருக்கடி வரலாம். ஆனாலும் தொகுதியில் உள்ள ஜாதி ஓட்டுகள், தான் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் 'திருமங்கலம் பார்முலா'வை தாண்டி தன்னை வெற்றி பெற வைக்கும் என உதயகுமார் நம்பி மீண்டும் போட்டியிடுகிறார்.
திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் கட்சிக்கு கிடைத்த நல்ல பெயரை ஓட்டுகளாக மாற்ற இத்தொகுதியை பா.ஜ., கேட்கிறது. ஆனால் தற்போதைய எம்.எல்.ஏ.,வான ராஜன்செல்லப்பா, தீபத்துாண் பிரச்னைக்கு குரல் கொடுத்தது, பல்வேறு நலத்திட்ட பணிகள் போன்ற காரணங்களால் மீண்டும் இத்தொகுதியிலேயே போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். ஒருவேளை கூட்டணி தர்மத்திற்காக திருப்பரங்குன்றம் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டால் மதுரை கிழக்கிற்கு ராஜன்செல்லப்பா மாறலாம்.
மதுரை வடக்கு 2021 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் சரவணன், இம்முறை அ.தி.மு.க., வேட்பாளராகவே களம் இறங்குகிறார். கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் சில மாதங்களாகவே தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவருக்கே 'சீட்' ஒதுக்க அதிக வாய்ப்பு என்கின்றனர்.
மதுரை கிழக்கு அமைச்சர் மூர்த்தி போட்டியிடும் தொகுதி என்பதால் வலுவான வேட்பாளரை களமிருக்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், ஒன்றிய செயலாளர் சேனாதிபதி, வழக்கறிஞர்கள் மகேந்திரன், கோபி உட்பட பலரும் விருப்பமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் தமிழரசன் மேலுார் தொகுதிக்கும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழரசன் அல்லது சேனாதிபதிக்கே அதிக வாய்ப்பு.
மேலுார் எம்.எல்.ஏ.,வான பெரியபுள்ளானுக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவர் சார்ந்த ஜாதி ஓட்டுகளும் வெற்றி பெற காரணமாக இருந்ததும் ஒரு காரணம். அதேசமயம் பா.ஜ., கோட்டாவில் மேலுாரை அ.ம.மு.க., கேட்கிறது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., சாமியின் மகன் ஆசையனை நிறுத்த அ.ம.மு.க., விரும்புகிறது.
மதுரை மத்தி இத்தொகுதியை பா.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., ஒதுக்குகிறது. அ.ம.மு.க.,வுக்கு ஒதுக்கும்பட்சத்தில் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுவார். அதேசமயம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் இத்தொகுதியை கேட்கிறது. கூட்டணிக்கு ஒதுக்காமல் அ.தி.மு.க., போட்டியிட்டால் சமீபத்தில் கட்சியில் சேர்ந்த முன்னாள் துணைமேயர் மன்னன், இளைஞரணி இணைச்செயலாளர் ஜெயபால் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம்.
சோழவந்தான் தனித்தொகுதியான இங்கு மீண்டும் அ.தி.மு.க.,வே போட்டியிடுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், கருப்பையா ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம் வெளிமாவட்டங்களில் வசிக்கும் இத்தொகுதியைச் சேர்ந்த 8 பேர் உட்பட 32 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். மாணிக்கமே முன்னிலையில் உள்ளார்.
உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், நீதிபதி, முன்னாள் அமைச்சர் துரைராஜ் மகன் துரை தனராஜ் உள்ளிட்டோர் 'சீட்' பெற முயற்சிக்கின்றனர். இதில் மகேந்திரன் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் இத்தொகுதியை பா.பி., கதிரவன் கேட்கிறார். அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதி என்பதால் பா.பி.,க்கு உசிலம்பட்டிக்கு பதில் நாங்குநேரி அல்லது தென்காசி ஒதுக்கப்படலாம்.
மதுரை தெற்கு இத்தொகுதியை தரவேண்டும் என அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., அழுத்தம் கொடுக்கிறது. ஒதுக்கப்படும்பட்சத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர். மகாலட்சுமி, நிர்வாகி கே.கே.ஸ்ரீநிவாசனுக்கு வாய்ப்பு அதிகம். அ.தி.மு.க., போட்டியிட்டால் கடந்த முறை நின்ற முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணனுக்கே இம்முறையும் வாய்ப்பு தரப்படலாம்.

