/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரெல்லாம் மழை வெள்ளம் திருமங்கலத்திலோ வறட்சி
/
ஊரெல்லாம் மழை வெள்ளம் திருமங்கலத்திலோ வறட்சி
ADDED : ஜன 04, 2024 02:37 AM

திருமங்கலம்: திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகாக்களில் மொத்தம் 28க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. ஆனால் திருமங்கலம் பகுதி கண்மாய்களில் ஒன்று கூட நிறையவில்லை.
கொக்குளம்,சொரிக்கம்பட்டி, கிண்ணிமங்கலம் கரடிக்கல், மாவிலிபட்டி, நாயக்கன்பட்டி, ஊராண்ட உரப்பனுார், சின்ன, பெரியகுளம், செங்குளம் உட்பட 28-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வருவதற்காக திருமங்கலம் பிரதான கால்வாய் திட்டம் உள்ளது.
இந்த கால்வாயில் போதிய அளவு தண்ணீர் வராமல் மண் மேவி இருந்ததால் சமீபத்தில் ரூ.19 கோடி செலவில் சிமென்ட் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. பணி முடிந்தும் திருமங்கலம் பகுதியில் எந்த கண்மாய்க்கும் முழுமையாக தண்ணீர் வரவில்லை. பல கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் இந்த கண்மாய் தண்ணீரை நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பயிர்கள் வறண்டு கிடப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
சாமிநாதன்: கண்மாய் விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. கண்மாய்கள் நிறையாததால் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாய்களில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்ட விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சந்தனம்: ரூ. 19 கோடி செலவில் சிமென்ட் தளம் அமைத்ததில் ஏதேனும் மோசடி நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். திருமங்கலம் பகுதிக்கு முறையாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றனர்.