/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சிறு,குறு நடுத்தர வணிகர்கள் கோரிக்கை
/
ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சிறு,குறு நடுத்தர வணிகர்கள் கோரிக்கை
ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சிறு,குறு நடுத்தர வணிகர்கள் கோரிக்கை
ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சிறு,குறு நடுத்தர வணிகர்கள் கோரிக்கை
ADDED : மார் 19, 2024 06:12 AM

மதுரை : ''தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் ரூ.45 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்ல அனுமதி என்பதை ரூ.ஒரு லட்சமாக அறிவிக்க வேண்டும் என சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் மார்ச் 16 மதியம் 3:00 மணி முதல் அமலுக்கு வந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படையினர், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம்கூட பெருங்குடி பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.18 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு ஆவணங்களின் அடிப்படையில் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு, செயலாளர் திருப்பதிராஜன், பொருளாளர் ரவிக்குமார் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: வணிகத்தில் ரொக்க பணப் பரிமாற்றம் தான் பெருமளவில் நடக்கிறது. வாகன சோதனையில் 'உரிய ஆவணங்கள் இல்லை' என்று கூறி பணத்தை தேர்தல் பறக்கும் படையினரும் போலீசாரும் பறிமுதல் செய்கின்றனர். ஆதாரம் காண்பித்து திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர். இந்த கெடுபிடிகளால் மிகவும் பாதிக்கப்படுவது தொழில் வணிகத்துறை, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் தான்.
இதுகுறித்து தெளிவான எளிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும். யதார்த்த வணிக நடைமுறையை புரிந்துகொண்டு வணிகம் பாதிக்காத வகையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளிடம் சரக்குகளை கொள்முதல் செய்வதற்கும் பல ஊர்களில் உள்ள சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு கடனுக்கு விற்ற பொருட்களுக்கு பணம் வசூலித்து வருவதிலும் ரொக்கப் பணத்தை வாகனங்களில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க முடியாது.
அத்துடன் ரொக்கப் பணத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று தான் டெபாசிட் செய்ய வேண்டும். மருத்துவம் போன்ற பல அவசரச் செலவுகளுக்காக மக்கள் ரொக்கமாகப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
வணிகர்கள் தங்கள் லெட்டர் பேடில் எவ்வளவு தொகை எந்த வங்கிக்கு எடுத்துச் செல்கிறோம் அல்லது வங்கியிலிருந்து திரும்ப நிறுவனத்திற்கு எடுத்து வருகிறோம் என்று எழுதப்பட்ட நிறுவனக் கடிதமும் சரக்கு விற்ற பாக்கித் தொகையை யாரிடமிருந்து வசூலித்து வருகிறோம் என்ற விபரத்துடன் கூடிய கடிதத்தையும் உரிய ஆவணங்களாக அறிவிக்க வேண்டும். ஏப்.,19 ஓட்டுப்பதிவு முடிந்த உடன் வாகன சோதனை நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.

