ADDED : பிப் 19, 2024 05:33 AM
மதுரை: வணிக வரித்துறையின் சமாதான் திட்டத்தில் 2024 மார்ச் 31க்கு முன் உள்ள வாட் வரியின் அனைத்து நிலுவைகளுக்கும் பயனளிக்கும்விதமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: வணிக சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 2024 மார்ச் 31 வரை நிலுவைத் தொகையை செலுத்த வணிகவரித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது நல்ல விஷயம் என்றாலும் 2021 மார்ச் 31 வரையான நிலுவைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்துகிறது. அதற்கு பின்பு உள்ள வரி நிலுவைகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
2021க்கு பின் நிறைய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வரி பாக்கி நிலுவையில் இருக்கிறது. அந்த இனங்களையும் திட்டத்தில் சேர்த்து கொள்ளா விட்டால் வணிகர்கள் மற்றும் அரசுக்கு முழுமையாக பயன் தராது.
வரி நிலுவை செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்ததோடு 2024 மார்ச் 31 வரை உள்ள வரி நிலுவைக்கும் பயனளிக்கும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும். சமாதான் திட்டத்தில் மனு தாக்கல் செய்யும் போது ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

