ADDED : டிச 13, 2025 06:29 AM

பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் டி.மேட்டுப்பட்டி ஊராட்சி கரடிக்கல்லில் அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்து வருகிறது.
கடந்த 2016ல் ரூ.6.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இங்கு பத்து குழந்தைகள் பயில்கின்றனர். இந்தக் கட்டடத்திற்கு செல்லும் பாதை, மையத்திற்குள் குழந்தைகள் ஏறிச் செல்லும் சறுக்குப் பாதை சேதமடைந்து உள்ளன. சிமென்ட் தளம் பெயர்ந்து ஓட்டை விழுந்துள்ளதால் குழந்தைகள் காயமடைய வாய்ப்புள்ளது.
சமீபத்திய மழைக்கு மின் ஒயர் அறுந்ததால் மையத்தில் மின் வசதியில்லை. இக்கட்டடத்தின் மேல் தேங்கும் மழை நீரால் உள்பகுதி அதிக ஈரத் தன்மையுடன் உள்ளது.
வனப்பகுதியை ஒட்டிய இடம் என்பதால் விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் உள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். கட்டடத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

