/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் குப்பைக்கு முடிவு கட்டுங்க...
/
அரசு மருத்துவமனையில் குப்பைக்கு முடிவு கட்டுங்க...
அரசு மருத்துவமனையில் குப்பைக்கு முடிவு கட்டுங்க...
அரசு மருத்துவமனையில் குப்பைக்கு முடிவு கட்டுங்க...
ADDED : டிச 13, 2025 06:29 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் குப்பையை தினமும் அள்ளுவதில் மாநகராட்சி சுணக்கம் காட்டுவதால் மருத்துவமனை நோயாளிகள் சுகாதாரக்கேட்டை சந்திக்கின்றனர்.
மருத்துவமனையின் பழைய வளாகத்தில் மட்டும் தினமும் 5000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 2500 உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களுடன் வரும் உறவினர்கள் உணவு, பிற தின்பண்ட குப்பையை வார்டுகளில் விட்டுச் செல்கின்றனர். தினமும் டன் கணக்கில் சேகரமாகும் மருத்துவக் கழிவு அல்லாத வார்டு குப்பையை மார்ச்சுவரி அருகிலுள்ள குப்பைக்கிடங்கின் குப்பைத்தொட்டியில் துாய்மைப் பணியாளர்கள் கொட்டுகின்றனர். இங்கு மட்டும் ஆறு குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு காலை, மதிய வேளைகளில் குப்பை முறையாக அகற்றப்பட்டு வந்தது.
ஓராண்டாக மாநகராட்சிப் பணியாளர்கள் குப்பை அள்ளுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். ஆறு குப்பைத்தொட்டிகள் இருந்தால் குப்பை சேரும் போது சுழற்சி முறையில் மாநகராட்சி எடுத்துச் செல்ல முடியும்.
தற்போது இரண்டு தொட்டி உள்ளதால் அதில் நிறைந்தது போக மீதமுள்ளவை வளாகத்தில் நேரடியாக கொட்டப்படுகிறது.
ஒருவாரமாக மாநகராட்சியில் இருந்து குப்பை அள்ளிச் செல்ல வாகனம் வராததால் வெள்ளக்கல் குப்பை மலை போல மருத்துவமனை வளாகத்தில் குப்பை குவிக்கப்பட்டது. இதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மார்ச்சுவரி பகுதியில் உள்ளவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். சிகிச்சைக்கு வந்தவர்கள் சுகாதாரக்கேட்டை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று (டிச. 12) மதியம் ஒரு மணி வரை இப்பிரச்னை நீடித்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம், மாநகராட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து குப்பை அள்ளப்பட்டது. வண்டி நிரம்பிய நிலையில் மீதம் ரோட்டில் தேங்கி கிடந்த குப்பையை துாய்மைப்பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
முன்பிருந்தது போல காலை, மதியம் இருவேளையும் மாநகராட்சி சுத்தம் செய்வதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

