/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ.,வில் ஓரங்கட்டப்படும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
/
பா.ஜ.,வில் ஓரங்கட்டப்படும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
ADDED : செப் 13, 2025 05:30 AM
மதுரை: தமிழக பா.ஜ.,வில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவரான பின் அவர், தினமும் தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவு கருத்துக்களை முன்வைத்தார். மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தி.மு.க.,வின் நேர் எதிர் கட்சி பா.ஜ., என்ற அளவுக்கு பேசப்பட்டது. மாநில அளவில் அண்ணாமலை தினமும் பேசப்படும் பொருளானார்.
அவரது சுறுசுறுப்பான சுற்றுப் பயணங்களால் கிராம அளவிலும் பா.ஜ., கொடி பறக்கத் துவங்கியது. இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடைவெளி ஏற்படத் துவங்கியது. அவரது நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாக கருதுவோர் டில்லி தலைமையிடம் தினமும் புகார் வாசித்தனர். இருப்பினும் டில்லி தலைமை அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. பா.ஜ., கடந்த தேர்தலில் 11.8 சதவீத அளவுக்கு ஓட்டுக்களைப் பெற்று வளர்ந்தது.
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய பா.ஜ., தலைமை, கூட்டணி சேர, அண்ணாமலை தடையாக இருப்பதாகக் கருதி மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி, நயினார் நாகேந்திரனை நியமித்தது. அதன்பின்னும் அண்ணாமலையின் வீரியமான பேட்டிகள் ஊடகங்களில் அடிக்கடி வெளியாகின்றன.
அவரால் பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி சரியாக இணைப்பாகவில்லை என்றுகூறி, அண்ணாமலை மீது மீண்டும் மீண்டும் புகார் வாசித்தனர். டில்லி தலைமையிடம், அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைந்து வருவதாக ஆதரவாளர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா, மறைந்த த.மா.கா., தலைவர் கருப்பையா மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அண்ணாமலையும் பங்கேற்றார்.
மாலையில் கட்சியினருடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இது கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. ஓரிரு நாட்களில் தமிழக பா.ஜ.,வின் 25க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அண்ணாமலையால் நியமிக்கப்பட்டவர்களே இருந்துள்ளனர். அவர்களை முற்றிலும் நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒவ்வொரு தொகுதியிலும் அண்ணாமலையால் அடையாளம் காணப்பட்ட ஆதரவாளர்கள் என கருதிய அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நிர்வாகிகளுள் ஒருவரான கே.பி.ராமலிங்கம் அளித்த பேட்டியில், ''கட்சியில் முதலாளி போன்று இருந்தவர்கள், மீண்டும் அதுபோல இடம் வேண்டும் என்றால் கொடுக்க முடியாது. இதெல்லாம் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு புரியாது'' எனத் தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் மனம்குமுறிக் கொண்டிருக்கின்றனர். அண்ணாமலையிடமும் முறையிட்டுள்ளனர். அவரும் பொறுமையுடன் இருங்கள் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.