ADDED : ஜூன் 02, 2025 01:06 AM
மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
துறை இயக்குநர் கண்ணப்பன் வரவேற்றார். வாரியம் மூலம் 33 உடற்கல்வி ஆசிரியர்கள், 10 தையல் ஆசிரியர்கள், 2 இசை ஆசிரியர்கள் என 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 7 தட்டச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, தலைமை நுாலகர் தினேஷ் குமார் பங்கேற்றனர். நுாலகம் சார்பில் நடத்தப்பட்ட கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் மகேஷ், மாற்றுத் திறனாளிகள் பிரிவுக்கு சென்றார். அங்கு மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 'கிபோ' மென்பொருள் மூலம் புத்தகங்களில் உள்ள எழுத்துகளை ஒலி வடிவில் மாற்றப்படுவதை நுாலகர் முருகனிடம் கேட்டறிந்தார்.