/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செயற்கை டிராக் பணி தொடக்கம்
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செயற்கை டிராக் பணி தொடக்கம்
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செயற்கை டிராக் பணி தொடக்கம்
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செயற்கை டிராக் பணி தொடக்கம்
ADDED : மார் 06, 2024 05:37 AM

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செயற்கை ஓடுதள டிராக் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் இதற்காக ரூ.8.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 -- 07 ல் அமைக்கப்பட்ட செயற்கை ஓடுதளம் காலாவதியான நிலையில் ரப்பர் துகள்கள் வெயில் நேரத்தில் வீரர்களின் காலை பதம் பார்த்து வந்தது. கடந்த ஜனவரியில் இங்கு நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக டிராக் பாதையில் பெரும்பள்ளங்கள் தோண்டப்பட்டு அரங்குகள் அமைக்கப்பட்டதால் மைதானம் முற்றிலும் சேதமடைந்தது.
சமீபத்தில் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி செயற்கை டிராக் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். இதற்காக ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் நேற்று இதற்கான பணியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி பொன்வசந்த், பூமிநாதன் எம்.எல்.ஏ, துணை மேயர் நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே உள்ள பழைய டிராக்கின் ரப்பர் தளம், உட்பகுதி தார் தளத்தை அகற்றிவிட்டு புதிதாக 400 மீட்டர் செயற்கை தடகள டிராக் அமைக்கப்படுகிறது. இதன் உட்பகுதியில் இயற்கை புற்களால் கால்பந்து மைதானம் வடிவமைக்கப்படும். ஓராண்டுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

