ADDED : டிச 18, 2024 05:50 AM

மதுரையில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் அஸ்வகந்தா மூலிகைச்செடியை பயிரிட்டுள்ளோம் என்கிறார் மதுரை திருமங்கலம் ராயபாளையம் கிராம விவசாயி தேவராஜ்.
பாரதிய கிசான் சங்கத்தின் மூலம் இந்த சோதனை முயற்சியை மேற்கொண்ட நிலையில் பயிர் தற்போது அறுவடை நிலையில் உள்ளது என்று விதைப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ராயபாளையம் ஸ்ரீபலராமர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் 300 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளோம். 5 இயக்குநர்களில் நானும் ஒருவன். பாரதிய கிசான் சங்கத்தின் மூலம் சர்வரோக நிவாரணியான அஸ்வகந்தா மூலிகை தாவரத்தின் மருத்துவ பயன்களையும் லாபத்தையும் தெரிந்து கொண்டோம். அதன் பின் வேடசந்துாரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்திற்கு விவசாயிகள் குழுவாக சென்று அஸ்வகந்தா பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டோம். பயிரிட்டுள்ள வயலை பார்வையிட்டோம்.
சோதனை அடிப்படையில் 5 விவசாயிகள் அஸ்வகந்தா விதையை பயிரிட்டோம். இது 5 மாத பயிர். வடிகால் வசதியுள்ள மற்றும் மானாவாரியிலும் பயிரிடலாம். முதல் முறை விதைத்த போது மழை பெய்ததால் விதைகள் ஆழத்திற்கு சென்றது. இதனால் முளைப்புத்தன்மை தாமதமானது. களையில்லாத நிலம் தான் பயிரிட ஏற்றது என்பதால் தொடர்ந்து உழுவது அவசியம். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவை. விதைகள் சிறியது என்பதால் மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். மானாவாரியில் ஒரு ஏக்கரில் 5 முறை உழுத பின் விதைகளை மேலாக துாவ வேண்டும். களை நிர்வாகம் அவசியம்.
விதைக்கும் போது நாற்றுகள் ஒரே இடத்தில் கூட்டமாக வளர்ந்திருந்தால் அவற்றை பறித்து வளராத இடங்களில் நடவு செய்யலாம். விதை மேலாக துாவினால் ஒரு வாரத்தில் முளைத்து விடும். அஸ்வகந்தா தண்டு, இலையை பவுடராக்கி டீத்துாளாக பயன்படுத்தலாம். 5 மாதங்களில் பூத்து விதை உருவாகும். விதைத்து 4 மாதங்களானதால் பூத்து காய்த்து நிற்கிறது. இன்னும் ஒருமாதத்தில் வேர் அறுவடைக்கு வரும். ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 200 கிலோ வேர் கிடைக்கும்.
புகையிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி மணிவேல் மூலம் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டோம். வேர் விற்பனைக்கும் சந்தை வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த செடிகள் நட்ட பின் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் வருவது குறைந்துள்ளது. மழை பெய்த பின் அவை நடந்து சென்ற தடம் தெரிந்தாலும் எந்த செடியையும் தாக்கி அழிக்கவில்லை. காட்டுப்பன்றி தாக்குதல் உள்ள இடங்களில் வயலில் வரப்பு செடியாக அஸ்வகந்தா பயிரிட்டால் அவற்றின் தொல்லை குறைந்து விடும். 5 விவசாயிகள் நடவு செய்ததில் 2 விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளோம். இது முதல் அனுபவம் என்பதால் பாடம் கற்றுக் கொண்டு மற்ற விவசாயிகளும் இதை பயிரிடுவோம் என்றார். அலைபேசி : 63793 56741.
-- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை